ஸ்கோப்யா, ஆக. 8
ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தை வென்ற ஸ்பெய்னின் ரியல் மாட்ரிட் அணியும், ஐரோப்பா லீக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைடெட் அணியும் நாளை (9 மலேசிய நேரப்படி பின்னிரவு 2.30க்கு சந்தித்து விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணி கடும் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றது. அண்மையில் இந்த இரண்டு அணிகளும் சந்தித்துக் கொண்ட ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இந்நிலையில் உலகின் தலைசிறந்த 2 முன்னணி கால்பந்து அணிகள் சூப்பர் கிண்ணப் போட்டியில் விளையாடுவதால், ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் கவனத்தையும் இந்த ஆட்டத்தை ஈர்த்துள்ளது. மன்செஸ்டர் யுனைடெட் அணியை பொறுத்தவரையில் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரரான ஹேரிக் பெலிக்கு இந்த ஆட்டத்தில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மார்கோஸ் ரோஹோவும் காயம் அடைந்துள்ளார். அதனால் பில் ஜோன்ஸ், கிரிஸ் ஸ்மோலிங் ஆகியோர் முதன்மை ஆட்டக்காரர்களாக இறக்கப்படலாம் எனத் தெரிகின்றது. அல்லது புதிதாக மன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்த விக்டர் நில்சன் லின்டெலேஃப்யுடன் மேற்குறிப்பிட்ட இருவரில் ஒருவர் களமிறங்கலாம்.
மத்திய திடல் பகுதியை பொறுத்தவரையில் நிமஞ்சா மேட்டிச், பௌல் பொக்பா, ஹென்ரே ஹாரேரா களமிறங்கக்கூடும் நிலையில் தாக்குதல் பகுதியில் மார்கோஸ் ராஷ்பேர்ட், ரொமெலு லுக்காக்கூ, ஹெண்றி மெக்கடேரியன் களமிறங்கலாம். ரியல் மாட்ரிட் அணியை பொறுத்தவரையில் கிறிஸ்டியாமோ ரொனால்டோ, காரிம் பென்ஸிமா, கேரேட் பேல் ஆகியோர் தாக்குதல் பகுதியில் களமிறக்கப்படலாம்.
அதேபோல் மத்திய திடல் பகுதியில் டோனி குரூஸ், லூகா மோட்ரிச், காசிமிரோ ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்காப்பு பகுதியில் வரேனா, சாகியோ ராமோஸ், மார்ஷேலோ, கர்வெல்ஜால் ஆகியோர் விளையாடலாம். உலகின் தலைசிறந்த கால்பந்து விளையாட்டாளர்கள் இந்த ஆட்டத்தில் மோதுவதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.


