செமினி, பிப். 15-
செமினி சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி வென்றெடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பாஸ் கட்சி நம்புகிறது.
செமினி பகுதிக்கு தேசிய முன்னணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் வருகை தந்த போது அங்கு எழுந்த ஆதரவு அலையை பார்க்கும்பொழுது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார்.
வாக்காளர்கள் மத்தியில் மிகப்பெரிய மனமாற்றம் உருவாகி இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் அது வாக்குகளாக மாறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் அவர்.
செமினி பகுதிக்கு டத்தோஸ்ரீ நஜிப் வருகை தந்த போது அதை இளைய சமூகத்தினர் மிகப்பெரிய கொண்டாட்டமாக வரவேற்றுள்ளனர் என செமினியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி பெறுவதற்கு பாஸ் கட்சி எப்படி உறுதுணையாக இருந்ததோ அதே போல் செமினி சட்டமன்றத் தொகுதியிலும் தேசிய முன்னணியின் வெற்றிக்கு தமது கட்சி உழைக்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் வேட்பாளரை அறிமுகம் செய்த நிகழ்ச்சியில் பாஸ் கட்சியின் தலைவரும் துணைத் தலைவரும் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. நாங்கள் இருவரும் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் எங்களின் ஆதரவு தேசிய முன்னணியின் வேட்பாளருக்கு தான் என துவான் இப்ராஹிம் உறுதியாகத் தெரிவித்தார்.


