கோலாலம்பூர் நவ. 4-
நம்பிக்கை கூட்டணி அரசு தனது 5 ஆண்டு கால ஆட்சி காலத்தில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் என்ற வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் உறுதியளித்தார்.
தற்போது 640,000 வேலைகள் உள்ளன. ஆனால் பிரச்சனை என்னவென்றால் பல இளைஞர்கள் இவ் வேலைகளுக்கு ஆர்வம் காட்டவில்லை. அக்கறை செலுத்தவில்லை என குலசேகரன் தெரிவித்தார். ”வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.” ”எங்களிடம் சுமார் 6 லட்சத்து 40 ஆயிரம் வேலைகள் உள்ளன. இந்த அனைத்து வேலைகளும் 3D (ஆபத்து அழுக்கு , கடினம்) வேலைகளை சார்ந்தது மட்டுமல்ல.”
நிறைய வேலைகள் உள்ளன ஆனால் பணியாற்றுவதற்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை என்று அவர் நாடாளுமன்றத்தில் பெரா நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த வேலைகளில் 21,000 வேலைகள் தொழில் வல்லுனர்கள் சார்ந்தது என்றும் 22,000 வேலைகள் தொழில்நுட்ப சார்ந்தது என்றும் அவர் தெரிவித்தார். பசுமை பொருளாதாரத்தின் கீழ் 2 லட்சத்து 50 ஆயிரம் வேலைகள் இருந்தன ஏற்கனவே 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைகள் நிரப்பப்பட்டுள்ளன என்ற தகவலையும் நாடாளுமன்றத்தில் அவர் வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் கடந்த ஆண்டு 5,832 அல்லது 25.6 விழுக்காடு உட்பட மொத்தம் 23,168 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதோடு தன்னார்வ பிரிவு திட்டத்தை (வி.எஸ்.எஸ்.) பெற்றதாகவும் குலசேகரன் தெரிவித்தார்.
இந்த ஆண்டு முதல் 9 மாதங்களில் மொத்தம் 24, 600 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அதில் 2,975 அல்லது 12.1 விழுக்காடு விஎஸ்எஸ் பெற்றவர்கள் என்றார் அவர்.
இணைய வேலைவாய்ப்புகளில் அடிப்படையில் ஆகஸ்டு இறுதி வரை பட்டதாரிகளுக்கு 50,326 வேலைகளும் பட்டதாரிகள் அல்லாதவர்களுக்கு 642,979 வேலைகளும் உள்ளன என குலசேகரன் விளக்கம் அளித்தார்.


