கோலாலம்பூர், நவ.6-
கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கான தகுதியை பி.கே.ஆர். கட்சியின் உதவித் தலைவரான தியான் சுவா இழந்திருப்பதாக மலேசிய தேர்தல் ஆணையம் எடுத்திருந்த முடிவு செல்லாது.
இனிவரும் தேர்தல்களில், அவர் தாராளமாக போட்டியிடலாம் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில், தியான் சுவா பத்து தொகுதியில் போட்டியிடவிருந்த நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கலின் போது, போட்டியிடுவதற்கான தகுதியை அவர் இழந்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பை தொடர்ந்து, பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதற்கான தகுதியை தாம் கொண்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையத்தின் அம்முடிவு நியாயமற்றது என அறிவிக்கக்கூறியும் கடந்தாண்டு ஏப்ரல் 26ஆம் தேதியில், தியான் சுவா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
கூட்டரசு அரசியலைமைப்பு 48(1)(e) பிரிவின் கீழ் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான தகுதியைத் தாம் கொண்டிருப்பதாகவும் தன் மீதான இரு வழக்குகளில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், ஷா ஆலாம் நீதிமன்றம் விதித்திருந்த அபராதம், அந்த தகுதியைப் பறிக்கவில்லை என்றும் தியான் சுவா அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதோடு, அப்போதைய மக்களவைத் தலைவரான டான்ஸ்ரீ பண்டிகார் அமின் முலியா தாம் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பதாக அறிவித்ததையும் கடந்த 13ஆவது பொதுத்தேர்தலில் தாம் தடையின்றி போட்டியிட்டதையும் தியான் சுவா சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில், தியான் சுவாவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


