கோலாலம்பூர், செப்.18-
நாட்டில் சுமார் 2,94,000 பேர் திவால் பிரச்னையை எதிர்நோக்கியிருப்பதாக திவால் இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் ரஹ்மான் புத்ரா தாஹா தெரிவித்தார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத அவர்கள் திவால் வழக்குகளை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
கடனுக்கு வாங்கிய பொருள்களுக்குப் பணம் செலுத்த முடியாதது, கடன் பட்டுவாடா அட்டை, தனிப்பட்ட கடன்கள், வீட்டுக் கடன்கள், கடனுக்காக உத்திரவாதக் கையெழுத்துப் போட்டது முதலானவற்றின் அடிப்படையில் இவர்கள் திவால் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். திவாலானவர்களில் 70 விழுக்காட்டினர் 35 வயதிலிருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்களாவர். ஒவ்வொரு ஆண்டும் 8,000 முதல் 20,000 பேர் வரை, பல்வேறு காரணங்களுக்காகத் திவாலாகி கொண்டிருக்கிறார்கள் என்று அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
தங்களுடைய கடன் பிரச்சனைகளைத் தொடர்ந்து நீடிக்காமல் தவிர்ப்பதற்கு திவாலானவர்கள், தாங்களாகவே முன்வந்து திவால் இலாகா, கடன் ஆலோசனை மற்றும் கடன் நிர்வாகத் துறையுடன் கலந்து பேசவேண்டும். திவால் நிலையிலிருந்து அவர்கள் மீள்வதற்கு நாங்கள் உதவி செய்யத் தயாராக இருக்கிறோம் என அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.


