கோலாலம்பூர், அக். 23
தேசிய முன்னணி அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு செடிக் வாயிலாக ஒதுக்கிய நிதி, இந்திய சமுதாயத்திற்குச் சென்றடைந்ததா என்பதை ஆய்வு செய்ய, தேசிய கணக்காய்வுத் துறைக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி நாடாளுமன்றத்தில் கூறியுள்ள கருத்தை, தாம் வரவேற்பதாகவும், பாராட்டுவதாகவும் ஜொகூர் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரன் கூறினார்.
அது மட்டுமின்றி செடிக்குடன் சேர்த்து, அதற்கு முன்னர் அரசாங்கத்தின் முயற்சியால் செயல்பட்ட சீட் அமைப்பின் கணக்காய்வும் ஒன்றாக நடத்தப்பட்டால், அதிலிருந்தும் ஒரு தெளிவு மக்களுக்குக் கிடைக்கும். காரணம் சீட் அமைப்பின் மீதும் மக்களுக்கு அதிருப்தி இருக்கும் நிலையில், அதனையும் ஆய்வு செய்தால் அரசாங்கம் மக்களுக்காக வகுத்த திட்டத்தில் எங்குக் கோளாறு நடந்தது என்பதன் உண்மை நிலை அனைவருக்கும் தெரியவரும்.
இந்த முழு ஆய்வின் வழி, உண்மையில் இந்திய சமுதாயம் எந்த அளவில் பயன் அடைந்தார்கள் என்ற உண்மை நிலையும் தெரியும். ஆகையால் அமைச்சர் வேதமூர்த்தியின் இந்நடவடிக்கையைத் தாம் வரவேற்பதாகவும், பாராட்டுவதாகவும் செடிக்குடன் சேர்ந்து சீட் அமைப்பையும் ஆய்வு செய்ய பரிந்துரைப்பதாகவும் டான் ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரன் அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்!


