சுபாங் ஜெயா, அக்.23–
சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில் நல்ல தீர்வு காண மந்திரி பெசார் அமினுடின் இணக்கம் தெரிவித்துள்ளதால் ஆலய நிர்வாகம் உட்பட யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த ஆலய விவகாரம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் மந்திரி பெசாருடன் சந்திப்பு நடத்தப்பட்டது. ஆலய வரலாறு, அது கட்டப்பட்ட ஆண்டு, இந்துக்கள் மனவேதனை உள்ளிட்ட பல தகவல்கள் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை ஒரு தரப்பு விசயம் குறித்து மட்டுமே மந்திரி பெசாருக்கு தெரிவிக்கப்பட்டது. மறுபக்கம் அவருக்கு தெரியபடுத்தப்படவில்லை. நாங்கள் இதுகுறித்து அவரிடம் விளக்கமாக தெரிவித்ததாக குணராஜ் சொன்னார்.
இந்த ஆலயம் குறித்த எல்லா விஷயங்களையும் கேட்டறிந்த மந்திரி பெசார் இவ்விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு காண இணக்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நில மேம்பாட்டாளர்களிடம் விரைவில் பேச்சு நடத்தவிருப்பதாக உறுதியளித்துள்ளார். ஆகையால், இந்த ஆலயத்திற்கு நல்லதொரு தீர்வு பிறக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மந்திரி புசாரின் இந்த வாக்குறுதி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதால் ஆலய நிர்வாகத் தரப்பு உட்பட யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். நவராத்திரி சமயத்தில் ஆலய விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். காவல்துறை, அமலாக்கப் பிரிவினரின் வருகை அச்சத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பில் மந்திரி பெசார் அறிவிப்புச் செய்யும் வரை யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
தீபாவளிக்கு புதிய இடத்தில் வழிபாடு நடக்கும் என்று செல்லப்பா தரப்பு கூறியிருக்கிறது. இந்த அம்மனின் படத்தை பிடித்து அங்கு வழிபடுங்கள். சிலையை ஒரு போதும் அகற்றக்கூடாது. மக்கள் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட வேண்டும். மக்களை துன்பப்படுத்த வேண்டாம் என்று குணராஜ் வலியுறுத்தினார்.
இந்த ஆலய விவகாரம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். ஆனால் அதேசமயம் மதம் என்று குறிப்பாக ஆலயம் என்று வந்து விட்டால் அனைவரும் உட்கார்ந்து பேச வேண்டும் என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.
இந்த விவகாரத்திற்கு தீர்வு காண உறுதியளித்த மந்திரி புசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தீபாவளி சமயத்தில் நில மேம்பாட்டாளர்கள் யாரும் ஆலயத்தை முற்றுகையிட்டு மக்களை துன்புறுத்த வேண்டாம் என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆலயம் 1950 இல் கட்டப்பட்டதாக அதனை நிர்மாணித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் படத்தோடு நிரூபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

