கோலாலம்பூர்,டிச.17 –
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி காலியானதைத் தெரிவித்து தேர்தல் ஆணையம் தமக்குக் கடிதம் அனுப்பி இருப்பதாக மக்களவை சபாநாயகர் டத்தோ முகமட் அரிப் முகமட் யூசோப் தெரிவித்ததோடு அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 54(1) பிரிவின்படி கேமரன் மலைத் தொகுதி காலியாகியுள்ளது. எனவே, அத்தொகுதியில் 60 நாட்களுக்குள் இடைத்தேர்தல் தேர்தல் நடத்தப்படும்.
14-ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி கைப்பற்றிய கேமரன் மலையின் வெற்றி செல்லாது என தேர்தல் நீதிமன்றம் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பள்ளித்தது. அத்தொகுதியை வெற்றிக் கொள்வதற்காகத் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ சிவராஜ் வாக்காளர்களுக்கு லஞ்சம் அளித்திருக்கும் குற்றச்சாட்டை அடுத்து தேர்தல் நீதிமன்றம் அத்தீர்ப்பை அளித்தது.
அத்தீர்ப்பை எதிர்த்து டிசம்பர் 14-ஆம் தேதிக்குள் சிவராஜ் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், மஇகா உதவித் தலைவருமான சிவராஜ் தமது கட்சி எடுத்த முடிவின் அடிப்படையில் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை.
அதனால், கேமரன் மலைத் தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இடைத்தேர்தல் குறித்து அறிவிக்க தேர்தல் ஆணையம் டிசம்பர் 19-ஆம் தேதி செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


