செமினி, பிப் 15-
பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் டுனடின் தோட்டத் தொழிலாளர்கள் 22 பேருக்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, 12,000 சதுர அடியில் ஆலயம் அமைப்பதற்கும் 12,000 அடியில் தேவாலயம் அமைப்பதற்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியில் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்த இலவச வீடுகளும் ஆலயம் மற்றும் தேவாலயம் அமைப்பதற்கு இடம் கிடைத்ததை அங்குள்ள இந்தியர்கள் இதனை மிகப் பெரிய வெற்றியாக கருதுகின்றனர் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் தெரிவித்துள்ளார்.
டுனடின் தோட்டத் தொழிலாளர்களும் மக்களும் பெற்ற இந்த உதவிகள் வெளியில் தெரியும் போது மற்ற இடங்களிலுள்ள இந்தியர்களும் இதே போன்ற உதவிகள் பெறுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இது போன்ற உதவிகளை அனைத்து தரப்பினராலும் செய்துவிட முடியாது. இந்த உதவியை பெறுவதற்கு டுனடின் தோட்ட ஈச் கெனட் நிர்வாகம் நல்ல ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியிருக்கிறது.
இதனிடையே, இந்தத் திட்டத்தை பெறுவதற்கு பிஎஸ்எம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் பல போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவருடன் அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு நல்லதொரு பயனை அடைந்துள்ளனர். அவர்களுக்கு தமது மனமார்ந்த பாராட்டுகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த காலங்களில் குறிப்பாக 2008ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்கள் இதுபோன்ற உதவிகள் பெறுவதில் பல குளறுபடிகள் இருந்தது. அதன் விளைவாகதான் ஹிண்ட்ராப் எனும் போராட்டம் நிகழ்ந்தது. இந்தியர்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களில் டுனடின் தோட்ட மக்களுக்கு கிடைத்த இந்த உதவியை நினைத்து தாம் பெருமைப்படுவதாக அவர் கூறினார்.


