Homeஅரசியல்தேசிய முன்னணியின் வெற்றிக்காக களம் இறங்கிய இளைஞர் படை!

தேசிய முன்னணியின் வெற்றிக்காக களம் இறங்கிய இளைஞர் படை!

செமினி, பிப் 22-

செமினி சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்ய மஇகாவின் இளைஞர் பிரிவு களமிறங்கி அதிரடியாக வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதில் மிக முக்கியமாக மாநில முன்னாள் இளைஞர் பகுதி தலைவர் நேருஜி, சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதியில் முன்னாள் தலைவர் கஜேந்திரன் ஆகியோர் முன்நின்று இளைஞர்களை வழி நடத்தி வாக்காளர்களைச் சந்தித்து தேசிய முன்னணியின் நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தனர்.

செமினி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் தேசிய முன்னணிக்கு இந்திய வாக்காளர்கள் ஆதரவு கிடைப்பது தான் மிக முக்கியம் என கஜேந்திரன் குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தலைமைத்துவத்தில் இந்திய சமுதாயத்திற்காக பிரத்தியேகமான சலுகைகள் வழங்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் இப்போது மீண்டும் பழைய நிலைக்கே நமது சமுதாயம் திரும்பிவிட்டது. சிறுபான்மையான இந்திய சமுதாயத்திற்கு எந்த ஒரு பிரத்தியேக சலுகையும் இந்த அரசாங்கத்தின் கீழ் கிடைக்கவில்லை என்பதுதான் மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்து இருக்கின்றது. இப்போதுதான் தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக களைய தொடங்கியுள்ளது.

இதனால் மீண்டும் அவர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கும் காலகட்டம் கடந்து இருக்கின்றது. ஆளும் அரசாங்கத்தை இடைத்தேர்தல்களில் வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால் மக்களின் வெறுப்புணர்வை சம்பாதித்தால் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு கேமரன் மலை இடைத்தேர்தல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என கஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.

நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் கட்சி என்று வந்த பிறகு தேசிய முன்னணியின் வெற்றி தான் நமது இலக்கு என நேருஜி குறிப்பிட்டார். இளைஞர்களின் ஆதரவை முழுமையாக பெற்றதன் காரணமாக தான் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

ஆனால் தேர்தல் சமயத்தில் இளைஞர்களை கவர்வதற்காக அவர்கள் வழங்கிய எந்த வாக்குறுதியும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. தற்போது 100 வெள்ளி உதவித்தொகை இளைஞர் சமுதாயத்திற்கு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருப்பதும் ஒருவகை அரசியல் தந்திரம் தான் என நேருஜி சுட்டிக்காட்டினார்.

ஆனால் இப்போது உள்ள இளைய தலைமுறை அரசியல் மாற்றங்களையும் அரசியல் நடைமுறைகளையும் முழுமையாக அறிந்திருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை உடனுக்குடன் எடைபோடும் ஆற்றலையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய கடந்த 9 மாதங்களில் இதுவரை எந்த திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. முன்னாள் அரசாங்கத்தை குறை கூறுவதை மட்டுமே தற்போதைய அரசாங்கம் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது என்பதை இளைஞர் சமுதாயம் அறிய தொடங்கிவிட்டது. இதனால் தேசிய முன்னணி அரசாங்கத்தின் நடவடிக்கையோடு தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் சிந்தனை வளர்ந்திருப்பதால் இந்த இடைத் தேர்தலில் தேசிய முன்னணி நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more