கோலாலம்பூர், நவ.14-
நீர் கட்டணம் குறைந்த அளவிலேயே உயரும் என நீர், நில, இயற்கை வள அமைச்சர் டத்தோ சேவியர் ஜெயக்குமார் ஆருடம் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம், நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பப்படும் நீர் வீணாகுவதைக் குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் என்றாரவர்.
நீர் கட்டணம் மூன்று குழுக்களாக பிரிக்கப்படும். அதில், மூன்றாவது குழுதான் அதிக கட்டணத்தைச் செலுத்த வேண்டிவரும். ஏறக்குறைய 60 விகிதத்தினர் முதல் குழுவில் உள்ளதாக மக்களவையில் டத்தோ சேவியர் ஜெயக்குமார் கூறினார்.
நீர் கட்டண உயர்வு மக்களுக்கு மகிழ்ச்சியைத் தராது என மெர்போக் நாடாளுமன்ற உறுப்பினரான நூர் அஸ்ரினா சூரிப் கூறிய போது, மாதத்திற்கு 15 ரிங்கிட் முதல் 20 ரிங்கிட் வரையில் நீர் கட்டணம் செலுத்தும் நால்வர் அடங்கிய குடும்பத்திற்கு, புதிய நீர் கட்டணம் 20 முதல் 30 காசு வரையில் மட்டுமே உயரும் என டத்தோ சேவியர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
நீர் விநியோகம் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமானால், நாம் செலவுகளைச் செய்ய வேண்டியுள்ளது. ஆயினும், அந்த புதிய கட்டணம் ஏற்புடையதாகவே இருக்கும். நடப்பில் 1000 லிட்டருக்கு 1 ரிங்கிட் 38 காசு கட்டணமாக பெறுப்படுகின்ற நிலையில், அதன் உற்பத்திக்காக 1000 லிட்டருக்கு 2 ரிங்கிட் 31 காசுகளைச் செலவு செய்ய வேண்டியுள்ளது.
குழாய்கள் ஓட்டைக் காரணமாக, பயனீட்டாளர்களுக்கு அனுப்பப்படும் நீரில், சராசரியாக 35 விழுக்காட்டு நீர் கசிவினால் காணாமல் போவதாக (கசிவதாக)அவர் கூறினார்.
நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தரத்தை மேம்படுத்தவும் நீர் வீணாகுவதைக் குறைக்கவும் வேண்டியுள்ளது. அதாவது, காணாமல் போகின்ற நீரில் 1 விகிதம் அளவு குறைப்பதற்கு 1 பில்லியன் ரிங்கிட் வரையில் செலவாகும் எனவும் டத்தோ சேவியர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.



