வித்தியாசமான காதல் கதையம்சம் கொண்ட ‘மெட்ரோ மாலை’ எனும் மலேசிய திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

துரோனா பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரன் மற்றும் ஷோபன் ஆகியோர் எழுதி, இயக்கியிருக்கின்றனர். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் குறும்படங்களை இயக்கியிருக்கின்றனர்.

சராசரி நகர வாழ்க்கையில் ஏற்படும் காதல் ஈர்ப்பை பற்றிய கதை கருவை கொண்டிருக்கும் இப்படத்தில் சதிஸ் மற்றும் புனிதா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இது Dostoevsky White Nights என்ற ஆங்கில திரைப்படத்தை முன்னோடியாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். தமிழ், ஆங்கிலம், மலாய் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்தத்  திரைப்படம் எந்த வகையிலும் நடைமுறை வாழ்க்கைக்கு புறம்பாக எடுக்கப்படவில்லை. கிட்டார் வாசிக்கும் ஒரு இளைஞனுக்கும் திருமணமாகிய பெண்ணுக்கும் ஏற்படும் உறவு முழுக்க முழுக்க அன்பின் ஏக்கத்தை மையமாக கொண்டுள்ளதாக இத்திரைப்படம் காட்டியிருக்கிறது.

இது போன்ற உறவு முறை நடைமுறை வாழ்க்கையில் தகாத உறவு அல்லது கள்ள காதல் என்று தவறான கண்ணோட்டத்தில் தெரிகிறது. இது போன்ற சிந்தனை மாற வேண்டும் என்றே இந்த கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் நம் மலேசிய சினிமா உலகிற்கு புதியதாக இருக்கும் என்றும் மக்களின் ஈர்ப்பைக் கொண்டு வரும் எனவும் படக்குழுவினர் நம்புகின்றனர்.

இப்படத்தில் வரும் அழகான ஞாயிறு பாடலை டாக்டர் பெர்ன் எழுதி, இசையமைத்திருக்கிறார். இதர பாடல்களுக்கு கபீர் வாசுகி இசையமைத்திருக்கின்றார். இப்படத்தின் டீசர் அண்மையில்  வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.