கோலாலம்பூர், நவ.17-
பக்காத்தான் ஹராப்பானின் வாக்குறுதியான சீர்த்திருத்த செயலாக்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடாக, தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலின் தோல்வி காட்டுவதாக டிஏபி கட்சியின் ஆலோசகரான லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
கடந்த 14ஆவது பொதுத்தேர்தலிலிருந்து மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்த மேம்பாட்டு நடவடிக்கைகள் மீது, அனைத்து இன மக்களும் மகிழ்ச்சியைக் கொண்டிருக்கவில்லை என்பதையும், அந்த தேர்தல் முடிவு வெளிபடுத்துவதாக இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறியுள்ளார்.
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பு, சீர்த்திருத்த அமலாக்கம் தொடர்பில் அக்கூட்டணி வழங்கிய வாக்குறுதி குறித்து உடனடி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போதைய தோல்விக்கு பிறகு, அதுவே, டிஏபி மற்றும் பக்காத்தானின் முதன்மை இலக்காக இருக்க வேண்டும் எனவும் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார்.


