கோலாலம்பூர், நவ.23-
பி.கே.ஆர். கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியைச் சந்தித்த தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது, தங்களுக்கு கட்சி ஏதும் இல்லாமல் இருப்பதாகவும் வேறு கட்சிகளில் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறியிருந்ததாக, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
அவரது அக்கூற்றை திட்டவட்டமாக மறுத்து அம்னோவின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், அஸ்மின் அலியுடனான சந்திப்பில், தாங்கள் ஒரு போதும் அவ்வாறு கூறியிருக்கவில்லை. இதற்கு முன்பு, பலமுறை கூறியதைப் போல், கட்சி தாவுதல் உள்பட அம்னோவை விட்டு ஒரு போதும் விலக மாட்டோம் என அந்த எழுவரும் தெரிவித்துள்ளனர்.
அஸ்மினுடனான சந்திப்பில், தங்களது தொகுதிகளை மேம்படுத்துவது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. மேலும், ஜொகூர், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் அபார வெற்றி, மக்கள் அம்னோ மீதும் அக்கூட்டணியின் மீதும் அதிக நம்பிக்கையை கொண்டிருப்பதை புலப்படுத்துவதால், அஸ்மின் அம்னோவில் இணைய வேண்டுமென தாங்கள் அழைப்பு விடுத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, துன் மகாதீரின் கூற்றை அவதூறான ஒன்று என அம்னோவின் பொதுச்செயலாளரான டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.


