ஷா அலாம், செப். 18-
சிலாங்கூரில் அம்னோவுடன் இணைந்து கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படும் என கூறப்பட்உவதை பாஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்தது. இது குறித்து சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரான டத்தோ இஸ்கண்டார் சாமாட் கூறுகையில், அப்படியொரு பேச்சுக்கே இடமில்லை என்றும் இப்போதைய மாநில அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதாகவும் அது தொடரும் என்றும் அவர் கூறினார்.
சிலாங்கூர் அரசாங்கம் வலுவான அரசாங்கமாக இருக்கின்றது. ஆகையால், அதனை கவிழ்க்கும் எண்ணத்தை பாஸ் கட்சி கொண்டிருக்கவில்லை அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி புசார் டான்ஸ்ரீ முஹம்மட் தாயிப் பி.கே.ஆர். கட்சியிலிருந்து விலகி அம்னோவில் இணைந்ததை தொடர்ந்து சிலாங்கூரில் ஆட்சி கவிழும் என்றும் பாஸ் கட்சி சட்டமன்ற் உறுப்பினர்களும் தற்போது எதிர்கட்சி வரிசையிலுள்ள அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைப்பார்கள் என்ற ஆருடங்கள் பரவி வருகின்றன.
இது குறித்து டத்தோ இஸ்கண்டார் சாமாட்டிடம் வினவிய போது சிலாங்கூரில் ஆட்சி கவிழ்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார். இப்போது சிலாங்கூர் அரசாங்கம் சிறந்த நிர்வாகத்துடன் செயல்பட்டு வருகின்றது. மக்களுக்காக பல்வேறு புதிய திட்டங்களையும் நாங்கள் வரைந்து செயல்படுத்தி வருகிறோம். எனவே, இப்போதைய ஆட்சியை கவிழ்த்துவிட்டு அம்னோவுடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் திட்டம் எதுவும் பாஸ் கட்சிக்கு கிடையாது என டத்தோ இஸ்கண்டார் கூறினார்.


