Homeமலேசியாமுகமட் தாயிப் போன்றவர்களால் அம்னோ படுதோல்வி காணும்! துன் மகாதீர் கிண்டல்

முகமட் தாயிப் போன்றவர்களால் அம்னோ படுதோல்வி காணும்! துன் மகாதீர் கிண்டல்

கோலாலம்பூர், செப். 18-
சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டான்ஸ்ரீ முகமட் முகமட் தாயிப் மீண்டும் அம்னோவிற்குத் திரும்பியதற்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட நம்பிக்கை கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர், அவரை போன்றவர்களால் வருகின்ற பொதுத்தேர்தலில் அம்னோ படுதோல்வி காணும் என தெரிவித்தார்.

முகமட் தாயிப் மீண்டும் அம்னோவிற்குத் தாவியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் தவளை மாதிரி. அம்னோவிலிருந்து பாஸ் கட்சிக்குத் தாவினார், பிறகு பிகேஆருக்குத் தாவினார், பெர்சத்து கட்சியிலிருந்த எனக்கு ஆதரவு தெரிவித்தார். இப்போது மீண்டும் ஓட்டுக்குள்ளேயே புகுந்து விட்டார்.

அம்னோவுக்கு என் வாழ்த்துகள். முகமட் தாயிப் போல இன்னும் அதிகமானோர் இருந்தால், எதிர்வரும் தேர்தலில் அம்னோ தோற்றுப் போகும் என மகாதீர் நகைச்சுவையோடு குறிப்பிட்டார். 1964லிருந்து அம்னோவில் இருந்த முகமட் தாயிப், ஏப்ரல் 2013இல் பாஸ் கட்சியில் இணைந்தார். பிறகு, 2015இல் மாற்று அரசாங்கத்தை நிறுவ முடியும் என்ற நம்பிக்கையுடன் பிகேஆருக்குத் தாவினார்.

முகமட் தாயிப் போன்றவர்களை நம்ப முடியாது என்று குறிப்பிட்ட மகாதீர் . தாயிப் 1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வெ. 3.8 மில்லியனை ஆஸ்திரேலியாவில் தவறாகப் பிரகடனம் செய்த காரணத்திற்காகக் குற்றம் சாட்டப்பட்டார். அதன் காரணமாக அவர் மந்திரி புசார் பதவியிலிருந்து விலகும்படி கட்டாயப் படுத்தப்பட்டார். இருப்பினும், தமக்கு ஆங்கிலம் சரிவரத் தெரியாது, நாணய விதிகள் புரியவில்லை என்ற காரணங்களைக் கூறியதன் பேரில் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

எனினும், நீதிமன்றம் அவசரப்பட்டு, தவறான முடிவு எடுத்துள்ளது என்று விசாரணை குழுவால் பின்னர் கண்டறியப்பட்டது. அவருக்கு ஆங்கிலம் தெரியுமென்று எனக்குத் தெரியும், அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இம்மாதிரியான ஆட்களை நம்ப முடியாது, என்றார் மகாதீர். முகமட் தாயிப் அம்னோவிற்குத் திரும்பியதை, பத்திரிக்கையாளர் மாநாடு நடத்தும் அளவுக்கு, டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடியும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுவது, தமக்கு மிகுந்த ஆச்சரியமாக ஏற்படுத்துவதாக மகாதீர் தெரிவித்தார்.

 

spot_img

latest articles

explore more