கோலாலம்பூர், செப், 22-
கீதையின் ராதை எனும் படத்தின் மூலம் நமது இதயங்களை கொள்ளை கொண்டவர் ஷாலினி பாலசுந்தரம். அவரது சொந்த இயக்கத்தில் உருவான அப்படம் மலேசிய ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்ததோடு மலேசிய தமிழ் திரைப்பட வரலாற்றில் அதிகம் வசூல் செய்த படங்களில் மூன்றாம் இடத்தை பிடித்தது.

மைந்தன், அப்பளம் ஆகிய படங்கள் வரிசையில் கீதையின் ராதை படமும் வசூலிலும் மலேசிய ரசிகர்களையும் அதிகம் கவர்ந்த படம் என கூறலாம். இந்நிலையில், ஷாலினி பாலசுந்தரம் தனது ஸ்டோரி பிலிம்ஸ் செண்டிரியான் பெர்ஹாட் எனும் நிறுவனத்தின் பெயரில் அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கி விட்டார். இப்படத்திற்கு ‘‘திருடாதே பாப்பா திருடாதே என பெயரிட்டுள்ளார்.

இப்படத்தில் நாயகியாக நடிப்பதோடு அப்படத்தையும் அவர் இயக்கி வருகிறார். அண்மையில் இப்படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு பிரிக்பீல்ட்ஸிலுள்ள ஓர் உணவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஷாலினி பாலசுந்தரம் கூறுகையில், கீதையின் ராதை படத்தை போலவே இப்படமும் காதலும் ஆக்சனும் கலந்த கதையம்சமாக உருவாகியிருப்பதாகவும் தற்போது இப்படத்தின் படபிடிப்பு விருவிருவென நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். கீதையின் ராதை இளைஞர்களை கவரும் வகையில் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. ஆனால், திருடாதே பாப்பா திருடாதே படம் காதலோடு ஆக்சனும் கலந்து படம் முழுவதும் ரசிகர்களுக்கு பிடிக்கின்ற அம்சங்களுடன் மிக வேகமான திரைக்கதையுடன் உருவாகி வருகின்றது. அதனால்தான், கதைக்கு ஏற்ற தலைப்பை வைத்துள்ளோம்.

இந்த புதிய படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வை கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி தலைநகரிலுள்ள சோமா அரங்கில் நடத்தினோம். சுமார் 250 பேர் இதில் கலந்துக்கொண்டனர். படத்தின் கதாநாயகன் சுரேஸ் டி7, கதாநாயகி ஷாலினி, முக்கிய கதாப்பத்திரத்தில் நடிகர் ஜெகன்நாதன் தவிர மற்ற கதாபாத்திரங்களுக்கு கதையின் தேவைக்கு ஏற்ப நடிகர், நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இப்படத்தில் எங்களுடன் கபில், ஜெகன்நாதன், யுவராஜ், ஹேமா ஜி, மஞ்சுளா, இர்பான் ஜைனி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். அதோடு, கீதையின் ராதை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவற்றில் அதில் இடம்பெற்ற பாடல்கள் அடங்கும். குறிப்பாக, என்னை கொல்லாதே பாடல் மலேசியா மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பிரபலமானது. அவ்வகையில், அப்படத்திற்கு இசையமைத்த ஜித்திஸ்தான் எனது புதிய படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனது சிந்தனைக்கு ஏற்ப எனது படகுழுவில் இடம்பெற்ற கலைஞர்கள் அனைவரும் மிக சிறப்பான ஆதரவை வழங்கி வருகின்றனர். மிக விரைவில் இப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கான அறிவிப்புகளை வெளியிடுவோம் என மகிழ்ச்சி பொங்க கூறினார் ஷாலினி பாலசுந்தரம்.