கோலாலம்பூர், ஜூலை 27-
மலேசியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை சம்மேளனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர்
டத்தோ டாக்டர் வி.சண்முகநாதன் தெரிவித்தார்.
தற்போது அனைத்து வர்த்தகம் மற்றும் தொழில்துறைகளும் உலகமயமாகிவிட்டதால் இந்நாட்டிலுள்ள இந்திய வர்த்தகர்கள் தங்களது வர்த்தகத்தை வெளிநாடுகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை சம்மேளனம், திண்டுக்கல் நிர்வாக சங்கம் ஆகியவற்றுக்கிடையிலான வர்த்தக வாய்ப்பு மீதான சந்திப்பு நிகழ்ச்சி இன்று தலைநகரிலுள்ள சிலாங்கூர் ரோயல் கிளப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட டத்தோ டாக்டர் வி.சண்முகநாதன் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு தமிழ்நாடு திருவாரூரைச் சேர்ந்த வர்த்தக சங்கத்துடன் வர்த்தக சந்திப்பை நடத்தினோம். தற்போது திண்டுக்கல் நிர்வாக சங்கத்துடன் இந்த சந்திப்பை நடத்துகிறோம். இந்த சந்திப்பில் அச்சங்கத்தைச் சேர்ந்த 50 வர்த்தகர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். நாங்கள் மலேசியாவிலுள்ள வர்த்தக வாய்ப்புகள் குறித்து விளக்கும் போது அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள வர்த்தக வாய்ப்புகளை எங்களுக்கு விளக்குவார்கள். இதன்வாயிலாக, இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்திக்கொள்ள முடிகின்றது.
அடுத்து வருகின்ற செப்டம்பர் மாதத்தில் சென்னை, மதுரை, கோயம்பத்தூர் ஆகிய இடங்களிலும் அங்குள்ள வர்த்தக சங்கங்களுடன் இதேபோன்ற சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவிருக்கிறோம். தற்போது மலேசியா பொருளாதாரத்தில் ஒரு மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற அனைத்துலக வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகள் வாயிலாக வருமானத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
சீனாவிற்கு அடுத்த நிலையில் மிகப்பெரிய அளவிலான வர்த்தக சந்தையை இந்தியா கொண்டுள்ளதால் இந்த வர்த்தக ஒத்துழைப்பு மலேசியாவிலுள்ள இந்திய தொழில்முனைவர்களுக்கு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும். குறிப்பாக, நாம் நமது உணவு பொருட்கள், காய்கறிகள், நொறுக்கு தீனி முதலானவற்றை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியும். அதேபோன்று, அங்குள்ள வர்த்தகங்களும் அவர்களுடைய தயாரிப்பிலான பொருட்களை நம் நாட்டில் சந்தைப்படுத்த முடியும். வருகின்ற காலத்தில் அலிபாபா எனும் மின்னியல் வர்த்தக முறையால் உள்ளூர் வர்த்தகர்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படவுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
அடுத்தாண்டில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பீஜி, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இந்திய வர்த்தக சங்கங்களை மலேசியாவிற்கு வரவழைத்து வர்த்தக வாய்ப்புகளை கண்டறியவிருக்கிறோம். இதில் உள்ளூர் வர்த்தகர்கள், வெளிநாட்டு வர்த்தகர்கள் என சுமார் 1000 பேர் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என டத்தோ சண்முகநாதன் கூறினார்.
இதனிடையே, திண்டுக்கல் நிர்வாக சங்கத்தின் தலைவர் ரகுராம் எங்களின் வேண்டுகோளை ஏற்று எங்களுடன் வர்த்தக தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முன்வந்த கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை சம்மேளனத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு திண்டுக்கல்மலேசியாவிற்கு இடையில் சிறப்பான வர்த்தக வாய்ப்பை இந்த சந்திப்பு ஏற்படுத்திக்கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.


