பிரிக்பீல்ட்ஸ், மார்ச் 31-
அண்மையக் காலமாக நாட்டில் இந்திய சமூகத்தினர் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கான விளம்பரங்களில் உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பது வேதனையளிப்பதாக எம்.ஏ. புரோடக்ஷன் ஹௌஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ முருகன் அல்லிமுத்து தெரிவித்தார்.
பெரும்பான்மையான விளம்பரங்களில் இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. உள்ளூரில் பல திறமையான கலைஞர்கள் இருக்கும் போது இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஏமாற்றமளிப்பதாக அவர் கூறினார்.

எம்.ஏ. புரோடக்ஷன் ஹௌஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாடறிந்த இயக்குநர் கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சுகமாய் சுப்புலக்ஷ்மி திரைப்படம் மே மாதம் 17இல் வெளியீடு காணவுள்ளது. இத்திரைப்படம் தொடர்பான ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு இன்று பிரிக்பீல்ட்ஸிலுள்ள உணவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய டத்தோ முருகன் மேற்கண்டவாறு சொன்னார்.
உள்ளூரைச் சேர்ந்த விளம்பர நிறுவனங்கள் உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். உள்ளூரைச் சேர்ந்த ஊடகங்களான வானொலி அலைவரிசைகள், தொலைக்காட்சி நிலையங்கள் முதலானவற்றில் ஒலி மற்றும் ஒளிப்பரப்பப்படும் விளம்பரங்களில் இந்திய கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் எம்.ஏ. புரோடக்ஷன் ஹௌஸ் நிறுவனம் சுகமாய் சுப்புலக்ஷ்மி திரைப்படத்தில் திறமையான உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. விளம்பரங்களில் உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் அது அவர்களின் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் என டத்தோ முருகன் குறிப்பிட்டார்.


