Homeமலேசியாகேங் 360 தேவன், கேங் 24 குண்டர் கும்பல்களிடமிருந்து 4 கோடி வெள்ளி பறிமுதல்!

கேங் 360 தேவன், கேங் 24 குண்டர் கும்பல்களிடமிருந்து 4 கோடி வெள்ளி பறிமுதல்!

கோலாலம்பூர், ஏப். 2-
கேங் 360 தேவன், கேங் 24 ஆகிய இரண்டு குண்டர் கும்பல்களிடமிருந்து சுமார் 4 கோடி வெள்ளி ரொக்கமும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விரு குண்டர் கும்பல்களும் நாடு தழுவிய நிலையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் போலீஸ் தெரிவித்தது.

கேங் 360 தேவன் மற்றும் கேங் 24 ஆகிய கும்பல்களின் சட்டவிரோத, பயங்கரவாத நடவடிக்கைகளை போலீஸ் துறை 2016ஆம் ஆண்டிலிருந்து அணுக்கமாகக் கண்காணித்து வந்ததாக புக்கிட் அமான் புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ ஹுசிர் முகமட் தெரிவித்தார்.

அந்தக் கும்பலின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து மேற்கண்ட ரொக்கத்தையும் சொத்துகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் இந்நடவடிக்கை பினாங்கில் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவ்விரு குண்டர் கும்பல்களும் கொலை, சுடும் ஆயுதங்களைப் பயன்படுத்தி கொள்ளையடித்தல், போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விநியோகித்தல், பதுங்கியிருந்து தாக்கிக் கொள்ளையடித்தல், ஆள் கடத்திப் பிணைப்பணம் கேட்டு நெருக்குதல் கொடுத்தல் போன்ற சட்டவிரோதக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த இரு குழுக்களும் எல்லைத் தகராறின் காரணமாக அடிக்கடி மோதிக் கொண்டு ரத்தம் சிந்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாகவும், ஒவ்வொரு குண்டர் கும்பல்களிலும் தலைவர் பதவிக்குப் கடுமையான போட்டிகள் நடந்துள்ளதாகவும், அணியில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் செல்வத்தை அடையவே அந்தப் போட்டிகள் நடந்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அந்த அணிகளின் தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கொள்ளையடிக்கப்படும் பணத்தின் பெரும் பங்கைப் பெற வாய்ப்பு இருப்பதாகவும் அதன் காரணமாகவே அணிகளில் எப்போதும் மோதல் நிகழ்ந்து கொண்டே இருந்ததாகவும் ஹுசிர் தெரிவித்தார்.

தற்போது அந்த இரு கும்பல்களின் சொத்துகளும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அவர்களின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், நிதியின்றி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமலும் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க முடியாமலும் அந்த இரு கும்பல்களும் தடுமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஹுசிர் சொன்னார்.

spot_img

latest articles

explore more