கோலாலம்பூர், ஆக.7-
முதலாளிமார்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு முறையாக இபிஎப் சந்தா தொகையை செலுத்துவதை உறுதி செய்ய ஊழியர் சேமநிதி வாரியம் பல்வேறு வழி வகைகளை மேற்கொண்டு வருவதாக அதன் அமலாக்கத் துறைத் தலைவர் ஹார்டியல் சிங் தெரிவித்தார்.
தற்போது பயனான கண்காணிப்பு முறையைக் கொண்ட ஆக்கப்பூர்வமான அமலாக்கக் குழுவை வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ளோம்.
இக்குழு நிபுணத்துவம் முழுகடப்பாடும் கொண்ட குழுவாக விளங்குகின்றது. ஆலோசனைகள் மட்டுமின்றி இக்குழுவில் இன்ஸ்பெக்டர்கள் என அறியப்படும் அதிகாரிகள் தங்களின் கடப்பாடுகளைச் செயல்படுத்துவதில் பிரச்னைகளை எதிர்நோக்கக்கூடிய முதலாளிமார்களுக்குத் தீர்வு காண வழி ஏற்படுத்தி தர தயாராக இருப்பதாக செய்தியாளர்களிடம் ஹார்டியல் சிங் குறிப்பிட்டார்.
அப்படி எந்த முதலாளியாவது ஒரு மாதத்திற்கு இபிஎப் சந்தா தொகையைச் செலுத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து அவர்களது இடத்திற்கு அதிகாரிகள் நேரடி வருகையை புரிவர்.
இறுதி நடவடிக்கையாக அறிவிப்பு அறிக்கையை கண்டுகொள்ளாத முதலாளிமார்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 1991ஆம் ஆண்டு ஊழியர் சேமநிதி சட்டத்தின் அடிப்படையில் முதலாளிமார்கள் தங்களின் தொழிலாளர்களின் இபிஎப் சந்தாவை செலுத்துவது கட்டாயமான ஒன்றாகும்.
இந்த தொகையை செலுத்தவில்லை என்றால் முதலாளிமார்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிகப்படும். அதுமட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு அவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படும். இதுவரையில் 10,000க்கும் அதிகமான நிறுவனங்களின் இயக்குநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் பதிவாகியுள்ள 568,000 நிறுவனங்களில் 7,810 நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களின் இபிஎப் சந்தாவை செலுத்தாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்று ஹார்டியல் சிங் கூறினார்.


