காஜாங், அக். 8-
நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த ஜூன் மாதம் வரை இருந்த 3,270 பெண் கைதிகள் சிறை வாழ்க்கையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள கடுமையாகப் போராடியதாக சிறைச்சாலைத் துறை அதிகாரி, இன்ஸ்பெக்டர் புனிதா சண்முகம் தெரிவித்தார்.
இதில் குறிப்பாக இங்குள்ள தாய்மார்களுக்கு பெரும் சவாலாக இருந்தது என்றுதான் கூற வேண்டும்.
சிறைச்சாலையில் நீதிமன்ற மேல் முறையீடு, குடும்ப விவகாரங்கள் ஆகியவற்றுடன் கைதிகளை கவனித்துக் கொள்வது அவர்களிடமிருந்து மிகச் சிறந்தவற்றைப் பெற வழி வகுக்கும். இதில் மன அழுத்தம் சிறைச்சாலைத் துறையில் ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது என்பதால் இவர்களைத் தங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றவாறு தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகள் கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும்.
இவர்களுக்கு மனநல ஆலோசனை சேவையும் வழங்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் மன அழுத்தத்துடன் இருப்பதற்குக் காரணம் இவர்கள் இன்னமும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றாற் போல் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளாததே ஆகும்.
அப்படி நடத்தையில் தவறுகள் ஏதேனும் காணப்பட்டால் அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும். இதில் அவர்களின் மன ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்வதற்கான கேள்விகள் வழங்கப்படும். அதில் குறிப்பிட்டப் புள்ளிகளைப் பெற்றால் மனநல ஆலோசனைக்கு அவர்கள் அனுப்பப்படுவர் என்று பத்திரிகையாளர்களிடம் புனிதா குறிப்பிட்டார்.
இதனிடையே, இங்கு பெரும்பாலும் தாய்மார்கள்தான் இருப்பதால் தங்களின் பிள்ளைகளைத் தனியே விட்டு விட்டக் காரணத்தினால் இவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிவிடுவர்.
இதில் புதிதாகக் குழந்தைப் பெற்ற தாய்மார்கள் ஓர் அமைதியான இடத்தில் ஓய்வெடுப்பதற்குத்தான் விரும்புவர்.
இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் குற்றிப்பிட்ட அளவிலானத் தொடர்பை மட்டுமே வைத்திருப்பதால் இதில் நன்முறையில் நடந்துக் கொள்பவர்களுக்குக் குறிப்பிட்ட சில வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த வகையில் ஜாலினான் காசே போன்ற குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அன்பைப் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அடங்கும்.
இவ்வாறு ஒவ்வொரு முக்கியமானப் பண்டிகைகளுக்கு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இதில் அப்பண்டிகைகளைக் கொண்டாடுபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் காஜாங் மற்றும் கோத்தாகினபாலு ஆகிய இடங்களில் பெண்களுக்கான சிறைச்சாலைகள் இருக்கின்றன. நாடு முழுவதும் இவர்களுக்கு என இதர 15 சிறைச்சாலைகள் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் சம்பந்தப்பட்டக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாவர். அந்த எண்ணிக்கையில் 1,499 பேருக்கு 1952 அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டு விட்டதாக புனிதா மேலும் கூறினார்.


