Homeகலை உலகம்மலேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபேன் கிளப் உதயம்!

மலேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபேன் கிளப் உதயம்!

கோலாலம்பூர், செப். 18-
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் மகுடத்தை கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல், மலேசியாவிலும் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் மலேசியாவிலுள்ள அவரது ரசிகர்களை ஒன்றிணைக்கவும் இங்குள்ள மக்களுக்கு அவரது பெயரில் சமூகநல பணிகளை மேற்கொள்ளவும் மலேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் (ஃபேன் கிளப்) உதயமாகியுள்ளது.

அண்மையில், செலாயாங் கெப்பிட்டலிலுள்ள அரங்கில் அதன் அதிகாரப்பூர்வ தொடக்கவிழா நடைபெற்றது. இக்கிளப்பை பிரபல தொழிலதிபரும் ம.இ.காவின் முன்னாள் மத்திய செயலவை உறுப்பினருமான ஏ.கே.இராமலிங்கம் திறந்து வைத்தார். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பேசிய ஏ.கே.ராமலிங்கம் கூறுகையில், வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து முன்னேறியவர் நடிகர் ரஜினிகாந்த். நடிகராக பார்க்கப்பட்ட அவர் இன்று தலைவர் எனும் நிலையை அடைந்துள்ளார். இக்கால தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்னோடியாக அவர் திகழ்கின்றார். அவரது பெயரில் தற்போது ஃபேன் கிளப் திறக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. கூடிய விரைவில் மிக பெரிய அரங்கில் இக்கிளப்பை மாபெரும் அளவில் திறந்து வைப்பதற்கு திட்டமிட்டுள்ளேன். இதற்கு இக்கிளப்பின் செயற்குழுவினரின் ஆதரவு எனக்கு தேவைபடுவதாக ராமலிங்கம் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த கிளப் குறித்து அதன் தலைவர் விஜேந்திரன் சந்திரதாஸ் கூறுகையில், இதற்கு முன்னர் மலேசியாவில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் கிளப் இருந்தாலும் அது எவ்வித இயக்கமும் இல்லாமல் உள்ளது. கடந்த ஆண்டு கபாலி படத்தின் படப்பிடிப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவிற்கு வந்த போதும் அப்படம் வெளியான போதும் அவருக்காக இங்கு தீவிரமாக இயங்கக்கூடிய கிளப் அமைக்க எண்ணம் கொண்டோம். அதன் பிறகு, ராஜேஸ்வரன் அப்புகா, டத்தோ மாலிக், டத்தோ ஷாண், ஏ.கே.ராமலிங்கம் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் பேரில் இந்த கிளப்பை சங்கப் பதிவிலாகாவில் முறையாக பதிந்து தொடங்கினோம். இப்போது இதில் 180 உறுப்பினர்களும் முகநூலில் எங்கள் பக்கத்தை சுமார் 18,000 பேர் தொடர்வதாக கூறினார்.

சிலர் திரைப்படங்களை பற்றியும் திரைப்பட நடிகர்களின் ரசிகர் மன்றங்களை பற்றியும் தவறாக நினைக்கின்றனர். நாங்கள் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு சினிமாவும் நடிகர்களும் முக்கிய காரணம். சினிமாவை நாம் எப்படி பார்க்கின்றோம் என்பதுதான் முக்கியம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபேன் கிளப் வாயிலாக பல்வேறு சமூகநல நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். எங்களிடம் யுனித்தார் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளனர். அவர்களின் உதவியுடன் தொடக்கக்கட்டமாக தமிழ்ப்பள்ளிகளில் 1ஆம் ஆண்டு முதல் 6ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல்களை வழங்கவிருக்கிறோம்.

எங்களது உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த திட்டத்தை நாங்கள் அடுத்த ஆண்டில் அமல்படுத்தவிருக்கிறோம். தலைவரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நிச்சயமாக சமூகநல பணிகளுக்கு இந்த கிளப் அதிக முக்கியத்துவம் அளிக்கும். எங்களது உறுப்பினர்களுக்காக டச் எண்ட் கோ வசதியை கொண்ட உறுப்பினர் அட்டையையும் வழங்கியுள்ளோம். இது அவர்களுக்கு பல வகைகளில் உதவியாக இருக்கும் என விஜேந்திரன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் அடுத்தாண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் 2.0 மற்றும் காலா ஆகிய படங்களின் தகவல்களும் அவரது வாழ்க்கை வரலாறும் காணொளியாக ஒளிபரப்பப்பட்டது. அதோடு, மலேசிய ரஜினிகாந்தின் குழு நடனமும் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இக்கிளப்பின் உறுப்பினர்கள், மலேசிய தல அஜித் ரசிகர் மன்றத்தின் தலைவர் தேவேந்திரன், மலேசிய ஏ.ஆர்.ரகுமான் ரசிகர் மன்றத்தினர் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.

 

spot_img

latest articles

explore more

1 comment

  1. நமது நாட்டிற்கு இப்போது மிகவும் தேவையான ஒரு மன்றம். எத்தனை இலட்சம் அல்லது மில்லியன் அந்த சூப்பர் ஸ்டார் மலேசிய மக்களுக்காக கொடுக்கிறார்? அல்லது உங்கள் சொந்த பணத்தைக் கொண்டு மன்றத்தின் நிகழ்ச்சிகளை வழிநடத்தப் போகிறீர்களா? அல்லது மக்களிடம் நன்கொடை வசூலிக்கப் போகிறீர்களா? ஆனால் பெயர் அவருக்கு போகுமோ? அதற்கு நீங்களே இன, மொழி, சமுதாயத்திற்கு பங்காற்றிய நல்லவர்களின் பெயரில் இதே நற்செயல்களைச் செய்யலாமே??

Comments are closed.