Homeசமூகம்சிறந்த அறிவியல் ஆய்வாளராக டாக்டர் விக்னேஸ்வரன் தேர்வு!

சிறந்த அறிவியல் ஆய்வாளராக டாக்டர் விக்னேஸ்வரன் தேர்வு!

ஈப்போ செப். 18-

மலேசியாவின் தேசிய பொது சுகாதார ஆலோசனை மன்றத்தின் 21 ஆம் ஆண்டு மாநாட்டில் ஈப்போவைச் சேர்ந்த டாக்டர் எஸ். விக்னேஸ்வரன் சிறந்த படைப்பாளராகவும், சிறந்த அறிவியல் பேச்சாளராகவும் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார். சிலாங்கூரில் உள்ள பாங்கி புத்ராஜெயா தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சுமார் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், விரிவுரையாளர்கள் முன்னிலையில் இவர் சிறப்புச் செய்யப்பட்டார். முன்னதாக இவர், மிகச் சிறந்த அறிவியல் ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈப்போ ஏ.சி.எஸ் உயர்நிலைப் பள்ளியிலும், சுங்கை பீசியிலுள்ள அரச மலேசிய இராணுவக் கல்லூரியிலும் தனது கல்வியை மேற்கொண்ட சு.விக்னேஸ்வரன், பினாங்கு பொது மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது அரசாங்கத்தின் முழு உபகார சம்பளத்துடன் மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். இவர் சுகாதாரத் துறையில் முனைவர் பட்டப் படிப்பை இறுதியாண்டில் மேற்கொண்டு வருகிறார். இதற்கு முன்பு இவர் இரண்டு முதுகலை பட்டங்களைப் பெற்றுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மலேசிய இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பகடிவதையில் ஈடுபட்டு வருவதற்கான காரணங்கள், உந்து சக்திகள், சூழ்நிலைகள் ஆகியவைகளைப் பற்றி மலேசியா முழுவதும் ஆராய்ச்சி செய்து பரவலாக காணப்படும் அதன் ஆதாரங்களையும், முக்கிய சான்றுகளையும் கண்டுபிடித்துள்ளார்.

மேலும் இவர் ஆஸ்திரேலியாவில் மெல்பன் அரசு மருத்துவமனையில் இளைஞர்களுக்கான பணி இடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இவர் செய்த ஆராய்ச்சிகள் இங்குள்ள இளைஞர் நிபுணத்துவ மருத்துவர்களின் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாகவும், ஊக்குவிப்பாகவும் அமைந்துள்ளன. இதன் வழி டாக்டர் விக்னேஸ்வரனுக்கு பகடிவதை பற்றி பல ஆழமான விஷயங்களை நன்கு அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது. மலேசிய மக்களிடையே அல்லது பெற்றோர்களிடையே தங்கள் பிள்ளைகளின் பகடிவதை பிரச்னையை அடையாளம் காண்பதற்கு போதிய முழுமையான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். அதோடு இப்பிரச்னை தற்பொழுது அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது என்பதை அவர்கள் அறியாமல் உள்ளனர் என்பதை டாக்டர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டிப் பேசினார்.

இந்த பகடிவதை பிரச்னைகளைக் களைய தொடர் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முறையாகச் செயல்படுத்தினால் நம் சமூகத்தில் காணப்படும் இளைஞர்கள் சீர்கேடுகளை முளையிலேயை கிள்ளி எறிந்து விடலாம். இது நாள் வரை தாம் மேற்கொண்டு வந்த பட்டப் படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் ஒத்துழைப்பு நல்கிய குடும்பத்தினர்களுக்கும் தேசிய மஇகா உச்சமன்ற உறுப்பினர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும், குடும்பத்தினர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

spot_img

latest articles

explore more