சென்னை, செப்.22 –
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இந்தியன் 2 திரைப்படம் உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஷங்கர் தற்போது 2.0 படத்தை இயக்கி வருகிறார். அதேவேளையில் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை வழி நடத்தி வருகிறார்.
கமல் நடித்த சபாஷ் நாயுடு திரைப்படம் பாதியிலே நிற்கும் நிலையில், விஸ்வரூபம் 2 படம் படப்பிடிப்பு முடிந்து போஸ் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களாக கமல்ஹாசன் தமது டுவிட்டரில் தமிழக அரசியல் குறித்து தொடர்ந்து கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் கமல்ஹாசனை வைத்து ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கவிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த படத்தில் தமிழக அரசியலின் நடப்பு சூழ்நிலையை பயன்படுத்தி ஷங்கரும் கமலும் திரைக்கதையை அமைக்ககூடும் என கணிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் இந்தியன் 2 படத்தை தயாரிக்க ஆசைப்படுவதாக ஏ.எம் ரத்னம் தெரிவித்திருந்தார். ஆனால் ஷங்கரின் இந்தியன் 2 படத்தை இம்முறை லைக்கா நிறுவனம் தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


