பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியத் தலைவர்கள், இந்திய சமூகத்தின் மத மற்றும் கலாச்சார உணர்வுகள் தொடர்பான விவகாரங்களில் ஏன் மௌனம் காக்கின்றனர் என ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் மத்திய செயற்குழு உறுப்பினரும், ம.இ.கா உலு லங்காட் தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவருமான சீ.ரே. சந்திரதேவன் @ நிலவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், காலணிகளை அணிந்தவாறு குத்துவிளக்கை ஏற்றியதாகக் கூறப்படும் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் இதுபோன்ற மத மற்றும் கலாச்சார உணர்வுகள் தொடர்பான விவகாரங்களில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள், குறிப்பாக டிஏபி தலைவர்கள், அப்போதைய பாரிசான் நேஷனல் அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததை நினைவுபடுத்தினார்.
ஆனால், தற்போது எழுந்துள்ள இந்த விவகாரத்தில் அதே அளவிலான எதிர்ப்புக் குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை என்றும், பக்காத்தான் ஹராப்பானில் அங்கம் வகிக்கும் இந்தியப் பிரதிநிதிகள் ஏன் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மதம் மற்றும் கலாச்சார உணர்வுகள் மற்றவர்கள் தவறு செய்யும்போது மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றனவா என்றும், கடந்த காலங்களில் வலியுறுத்தப்பட்ட கொள்கைகள் இன்று ஏன் கேள்விக்குறியாகியுள்ளன என்றும் அவர் வினவினார்.
தமது கருத்து யாரையும் குற்றம் சாட்டுவதற்காக முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட சந்திரதேவன், அனைத்து சமூகங்களின் மதம், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மதித்து நடப்பது அனைவரின் கடமையாகும் என்றார்.
மேலும், மக்களின் மத நம்பிக்கைகளையும் கலாச்சார உணர்வுகளையும் மதிக்கும் கொள்கை, ஒருவரின் அரசியல் நிலைப்பாடு அல்லது வகிக்கும் பதவிக்கு ஏற்ப மாறக்கூடாது என்றும், இவ்விவகாரம் தொடர்பாக உரிய விளக்கத்தைப் பெற பொதுமக்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார்.


