கோலத்திரெங்கானு, ஜூலை.24 –
மறைப்பதற்கு ஒன்றுமில்லை 2 என்ற விவாதத்தில் அரசாங்கத்தைச் சேர்ந்த எந்த ஒரு நபருடன் விவாத நடத்த தயார் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முஹமட் தெரிவித்துள்ள கருத்து தமக்கு கிடைத்த கெளரவம் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஃபுவாட் சர்காஷி தெரிவித்துள்ளார்.
ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம் தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகளுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க இந்த விவாத மேடை சிறந்த களமாக இருக்கும் என ஜாசா எனப்படும் நாட்டின் சிறப்பு விவகாரங்களுக்கான பிரிவின் இயக்குனருமான ஃபுவாட் தெரிவித்துள்ளார்.
மறைப்பதற்கு ஒன்றுமில்லை 2 என்ற விவாத மேடையில் அரசாங்கத்தின் எந்த ஒரு நபரையும் சந்திக்க தயார் என மஹாதீர் நேற்று முன் தினம் அறிவித்திருந்ததை தாம் வரவேற்பதாக ஃபுவாட் கூறினார். இனி இந்த விவகாரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வீண் விவாதங்களை நடத்த தேவையில்லை என அவர் சொன்னார்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு பதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்ற விவாத மேடையில் தாம் கலந்து கொள்ள தயாராக இருப்பதாக ஃபுவாட் கடந்த வாரம் அறிவித்திருந்தார். மஹாதீரின் பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு இந்த விவாதத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விவாத மேடைக்கான திகதி , இடம் ஆகியவற்றை முடிவு செய்வதை பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவிடமே ஒப்படைத்து விடுவதாக ஃபுவாட் தெரிவித்தார். கடந்த ஆண்டில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்ற முதல் விவாத மேடை நடத்தப்படுவதற்கு தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ காலிட் அபு பாக்கார் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
அனுமதியின்றி நடைபெற்ற அந்த விவாதத்தில் மஹாதீரின் ஆதரவாளர்கள் அத்துமீறி மேடையை ஆக்கிரமித்து குழப்பம் விளைவித்தனர். பாதுகாப்பு காரணமாக நஜிப் அந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.


