ஷா ஆலம், ஜூலை 24-
சிலாங்கூர் தண்ணீர் உற்பத்தி நிறுவனமான ஸ்ப்லேஷை எடுத்துக் கொள்வது மீதான மதிப்பீட்டை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை என்று மந்திரி புசார், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.
இதில் ஸ்ப்லேஷின் மதிப்பீட்டு முறையை மத்திய அரசு நியமிக்கும் அனைத்துலக சுயேட்சை மதிப்பீட்டாளர்தான் செய்வார் என்று எரிசக்தி பசுமைத் தொழில்நுட்பம் நீர் துறை அமைச்சு கடந்த மே 26ஆம் தேதி கொண்ட கடிதத்தின் வாயிலாகக் குறிப்பிட்டிருந்தது.
அதனால் ஸ்ப்லேஷை எடுத்துக் கொள்வது மீதான மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் பதிலுக்காக மாநில அரசு இன்னும் காத்துக் கொண்டுதான் இருக்கிறது.
இதே கடிதத்தில் ஸ்ப்லேஷை 60 விழுக்காடு மத்திய அரசு எடுத்துக் கொள்ளும் வேளையில் 40 விழுக்காடு மாநில அரசு எடுத்துக் கொள்ளும் என்று தனது நிலைப்பாட்டையும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அது மட்டுமின்றி சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் தண்ணீர் தரத்தை மேம்படுத்த இணக்கம் தெரிவிக்கும் வகையிலானக் கடிதம் ஒன்றை மாநில அரசு எழுதிக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சு நெருக்குதல் கொடுப்பதாக மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் ஸ்ப்லேஷை எடுத்துக் கொள்வது மீதான புதிய நிலவரம் என்ன என்று பெர்மாத்தாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், டத்தோ சுலைமான் அப்துலின் கேள்விக்கு அஸ்மின் அலி பதிலளித்தார்.
இதில் அமைச்சு பரிந்துரைத்த ஸ்ப்லேஷை எடுத்துக் கொள்வது மீதான விகிதம் மற்றும் தண்ணீர் தரத்தை மேம்படுத்தும் கோரிக்கையையும் கடந்த மாதம் 22ஆம் தேதி மாநில அரசு மீண்டும் நிராகரித்தது.
இந்த நீட்டிப்பை மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாத வகையில் 2 தரப்பு அரசுகளும் ஒப்புக் கொண்டன. இதில் ஸ்ப்லேஷுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் சிலாங்கூர் மக்களுக்குச் சுமையாக இருக்காது என்று மாநில அரசு உத்தரவாதம் அளிக்கிறது என பிகேஆர் துணைத் தலைவருமான அஸ்மின் அலி மேலும் கூறினார்.


