பெட்டாலிங் ஜெயா, ஜன.8-
14ஆவதுப் பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றால் அதன் பிரதமராக துன் டாக்டர் மகாதீர் பொறுப்பேற்பார் என அக்கூட்டணி அறிவித்திருப்பது வருத்தமளிப்பதாக பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவி ஜூராய்டா கமாருடின் தெரிவித்தார்.
20 ஆண்டுகளாகக் கடுமையாகப் போராடி வந்தும் இவர்களால் பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்ய முடியவில்லை. பெர்சத்து கட்சி இல்லாமலேயே சிலாங்கூரையும் பினாங்கையும் நாம் கைப்பற்றி விட்டோம் என இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜூராய்டா கூறினார்.
வரும் பொதுத்தேர்தலில் இந்த 4 கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றால் மகாதீர்தான் பிரதமர் வேட்பாளர் என நம்பிக்கை கூட்டணி இன்று உறுதிப்படுத்தியது. முன்னதாக பிகேஆர் தலைவரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியாருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இப்ராஹிம் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் அக்கூட்டணியின் தலைமைச் செயலாளர் டத்தோ சைபுடின் அப்துல்லா நேற்று கூறினார்.
எப்படியிருப்பினும் இந்த அறிவிப்பு தேர்தலில் வெற்றி பெறக் கடுமையாக உழைக்கும் என் எண்ணத்தை ஒரு போதும் நிறுத்தாது. இதில் நல்லது நடக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த விவகாரத்தில் எனக்கு துன் மகாதீருடன் தனிப்பிட்ட விரோதம் ஏதுமில்லை என ஜூராய்டா குறிப்பிட்டார்.


