பெட்டாலிங் ஜெயா, ஜன.8-
கடந்த கால பகைகளை மறக்கும்படி துன் டாக்டர் மகாதீர் நம்பிக்கைக் கூட்டணியிடம் இப்போது கூறினாலும், தேசிய முன்னணியிலுள்ள ம.சீ.ச. மற்றும் ம.இ.கா. ஆகிய கட்சிகள் துன் மகாதீரை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கும் முடிவு குறித்து கேள்வியெழுப்பும்போது அவரது கொடுங்கோல் ஆட்சியை மீண்டும் நினைவுப்படுத்த வேண்டும் என ம.சீ.சவின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் வலியுறுத்தினார்.
1998ஆம் ஆண்டு அமைச்சரவையில் டத்தோஸ்ரீ அன்வாரை நீக்கியது, ஓப்ஸ் லாலாங் சோதணையில் பலர் கைதானது, 1980ஆம் ஆண்டின் இறுதியில் அப்போதைய நாட்டின் தலைமை நீதிபதி துன் சாலே அப்பாஸ் நீக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களை அவ்விரு கட்சிகளும் நினைவுப்படுத்த வேண்டுமென அவர் கூறினார்.
துன் மகாதீரை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது நம்பிக்கைக் கூட்டணிக்கு கொள்கை இல்லாததைக் காட்டுகின்றது. ஆகையால், இவ்விவகாரங்களை நினைவுப்படுத்தினால் அவர்கள் புத்ராஜெயாவைக் கைப்பற்று விவகாரத்தில் அவர்களின் இப்போதைய மனநிலையை மாற்றி அவர்களின் சிந்தனையை மாற்ற முடியும் என வீ கா சியோங் குறிப்பிட்டார்.
வரும் பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றிப் பெற்றால் அதன் பிரதமராக துன் டாக்டர் மகாதீர் பொறுப்பேற்பார் என அக்கூட்டணியின் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தனது உரையில், துன் மகாதீர் தேசிய முன்னணியை வீழ்த்துவதற்காக கடந்த கால பகையை மறந்து ஒத்துழைப்பு வழங்கிவரும் அன்வாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றியைக் கூறிக்கொள்வதாக அவர் கூறினார்.
மேலும், வரும் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை வீழ்த்தும் இலக்கை அடைவதற்கு நம்பிக்கைக் கூட்டணியிலுள்ள விமர்சகர்கள் கடந்த கால பகைகளை புறந்தள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். நம்பிக்கைக் கூட்டணியின் முடிவு எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. அக்கூட்டணியில் மகாதீர் மட்டுமே எதிர்ப்பார்ப்பிற்குரியவர் என டத்தோஸ்ரீ வீ கா சியோங் சொன்னார்.
இதனிடையே, ம.இ.கா.வின் பொருளாளர் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி கூறுகையில், நம்பிக்கைக் கூட்டணியின் இத்தகைய முடிவு 1990ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட ரிபோர்மாசி உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டு வந்த பி.கே.ஆரின் ஆதரவாளர்களின் அர்ப்பணிப்பு பற்றி கவலைப்படாததைக் காட்டுவதாக சாடியிருந்தார்.


