பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25
பக்காத்தான் ஹராபான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால்கூட துன் டாக்டர் மகாதீர் முகமட் பிரதமராக முடியாது என தொடர்பு, பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலே சைட் கெருவாக் குறிப்பிட்டுள்ளார். பிகேஆரின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கும் டாக்டர் மகாதீர் பிரதமராவதற்கு ஒருகாலும் சம்மதிக்கவும் இடம்கொடுக்கவும் மாட்டார்கள். டாக்டர் மகாதீர் அவர்களுக்கு இழைத்த கொடுமைகளை அவர்கள் மறக்க மாட்டார்கள்.
மேலும், பக்காத்தான் மகாதீர் திரும்பவும் வருவார் என்று சொல்லி வாக்காளர்களிடம் வாக்குகளைக் கேட்க முனைந்தால் அது தற்கொலைக்குச் சமமாகும் என சாலே தமது வலைப்பதிவில் கூறியிருந்தார். 92 வயதாகும் டாக்டர் மகாதீர் மீண்டும் பிரதமராக முடியும் என்று நம்பினால் அவர் உண்மை நிலவரத்தை உணராதவர் என்றுதான் பொருள்படும்.
டாக்டர் மகாதீர் பதவி விலகிச் சென்று ஓராண்டு கடந்த பின்னர் 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை நடத்தியது. நடந்த அந்தத் தேர்தலில்தான் தேசிய முன்னணி வரலாற்றிலேயே மிகச் சிறந்த வெற்றியைப் பதிவு செய்தது. டாக்டர் மகாதீர் விலகிச் சென்று விட்டார் என்ற மகிழ்ச்சியில்தான் மக்கள் தேசிய முன்னணிக்கு அபரிமிதமான ஆதரவை வழங்கினர் என சாலே குறிப்பிட்டார்.
டாக்டர் மகாதீருக்குப் பிரதமர் பதவி என்று கூறுவதெல்லாம் பொய். அவர் தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கைச் சாட வேண்டுமென்பதற்காகவே அவர் அவ்வாறு குறிப்பிட்டு வருகிறார் என அவர் குறிப்பிட்டார்.


