கோலாலம்பூர், ஜூலை 27-
தேசிய இருதயச் சிகிச்சைக் கழகம் (ஐஜேஎன்) முதல்முறையாக ஒட்டுமொத்த பெருநாடி மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு புதிய சாதனையை செய்துள்ளது.
கடந்த வாரம் 44 வயது நிரம்பிய ஒரு பெண்ணுக்கு பெருநாடியில் அசாதாரண வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன் இவருக்கு ஏற்கனவே 2 முறை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக ஐஜேஎன்னின் இருதய அறுவைச் சிகிச்சைக்கான மருத்துவர் கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
குருதி நாள நெளிவினால் (aneursym) இரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டு அதன் மூலம் மரணம் ஏற்படுவதற்கு 80 விழுக்காடு வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பெருநாடி மாற்று அறுவைச் சிகிச்சை உண்மையில் மிகவும் கடினமானது என்பதால் ஒரு சில நோயாளிகள் இந்த சிகிச்சையை மறுக்கின்றனர். இருந்தபோதிலும் ஐஜேஎன்னில் உள்ள வசதிகள் மற்றும் திறன்களைக் கொண்டு அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
வயது முதிர்வு மட்டுமின்றி உயர் இரத்த அழுத்தம், அதிக அளவில் கொழுப்பு, புகைப்பிடித்தல் முதலிய காரணங்களால் லட்சத்தில் 5 பேருக்கு இந்த குருதி நாள நெளிவு ஏற்படுகிறது. இது பரம்பரை நோய், மந்தமான வாழ்க்கை (sedentary lifestyle) அல்லது மோட்டார் சைக்கிள் விபத்து ஆகியவற்றாலும் ஏற்படும் என்று பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.


