லண்டன், மார்ச்.8 –
2017/18 ஆம் பருவத்துக்கான ஐரோப்பிய வெற்றியாளர் லீக் ( சாம்பியன்ஸ் லீக் ) கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றுக்குத் தேர்வுப் பெறுவதில் இங்கிலாந்தின் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் தோல்வி கண்டுள்ளது.புதன்கிழமை நடந்த இரண்டாவது சுற்றின் இரண்டாம் கட்ட ஆட்டத்தில் டோட்டேன்ஹேம் ஹோட்ஸ்பர் 1 – 2 என்ற கோல்களில் இத்தாலியின் யுவன்டசிடம் தோல்வி கண்டது.

மூன்று வாரங்களுக்கு முன்னர் முதல் ஆட்டத்தில் இரண்டு அணிகளும் 2 – 2 என்ற கோல்களில் சமநிலைக் கண்ட வேளையில், 4 – 3 என்ற ஒட்டு மொத்த கோல்களில் யுவன்டஸ் மீண்டும் காலிறுதி சுற்றில் கால் பதித்துள்ளது.

யுவன்டசுக்கு எதிரான ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் மிகப் பெரிய அதிரடியைப் படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.எனினும் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் ஆட்டக்காரர்களின் அனுபவமின்மை மற்றும் தற்காப்பு அரணின் பலவீனம் அந்த அணியின் தோல்விக்கு வித்திட்டது.

முதல் பாதியின் சொன் ஹியூங் மின் போட்ட கோலின் மூலம் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 1 – 0 என முன்னணிக்கு சென்றது.எனினும் இரண்டாம் பாதியில் கன்சாலோ ஹிகுவாய்ன், பவ்லோ டியாபாலா போட்ட இரண்டு கோல்கள், யுவன்டசின் வெற்றியை உறுதிச் செய்தது. 17 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.


