கோலாலம்பூர், ஏப். 2-
கடந்தாண்டு தொடங்கி ஆபத்துகள் நிறைந்த பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு 653 பகடிவதை சம்பவங்கள் குறைந்துள்ளதாக துணைக்கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு 2016இல் 3,448ஆக பதிவான பகடிவதை சம்பவங்கள் 2017இல் 2,795ஆக பதிவாகியிருப்பதாக நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.
நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என மார் தட்டி கூறவில்லை. மாறாக, வெற்றியைப் பெறும் நடைமுறையில் இருக்கின்றோம் என குறிப்பிட்ட பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டம் குறித்து கேள்வியெழுப்பிய செலாயாங் பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் கமலநாதன் மேற்கண்டவாறு சொன்னார்.
ஆபத்துகள் நிறைந்த பள்ளிகள் என அடையாளம் காணப்பட்ட பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் வழங்கிய 8 சிசிடிவி கேமராக்கள், 2 கண்காணிப்பு திரை ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.
பள்ளியின் முதன்மை நுழைவாயில், பாதுகாவலர் அறை, பள்ளியின் நிர்வாக அலுவலகத்தின் நுழைவாயில் என மூன்று இடங்களில் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 5 இடங்களை பள்ளியின் நிர்வாக முடிவு செய்துள்ளது.
அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கூடம், பட்டறை, எழுதுகோல் கிடங்கு, கூட்டுறவு, ஆசிரியர் அறை, தங்கும்விடுதியின் நுழைவாயில் மற்றும் மிதமான ஆபத்துகள் நிறைந்த பகுதி முதலானவை இதில் அடங்கும். ஆயினும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தனியுரிமைக்கு எதிர்ப்பாக இல்லாமல் ஏற்புடைய இடங்களில் மட்டுமே சிசிடிவி கேமராவை பொருத்த வேண்டும் என கமலநாதன் கூறினார்.






