தூரின், ஏப்.4 –
2017/18 ஆம் பருவத்துக்கான ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான ரியல் மாட்ரிட் 3 – 0 என்ற கோல்களில் இத்தாலியின் யுவன்டசை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்டின் உச்ச நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களைப் போட்டு அதிரடி படைத்துள்ளார்.
அதிலும் ரொனால்டோ போட்ட இரண்டாவது கோல் கால்பந்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. இந்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மட்டும் ரொனால்டோ 14 கோல்களைப் போட்டுள்ளார். தூரின் நகரில் ஆட்டம் தொடங்கிய 3 ஆவது நிமிடத்தில் ரொனால்டோ , ரியல் மாட்ரிட்டின் முதல் கோலைப் போட்டார்.
இரண்டாம் பாதி ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த அற்புதமான கோலின் வழி ரியல் மாட்ரிட் 2 -0 என்ற கோல்களில் முன்னணிக்கு சென்றது. 2002 ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்டின் தற்போதைய பயிற்றுனர் சினிடின் சிடான் அடித்த கோலுடன் அந்த கோல் ஒப்பிடப்படுகிறது.
எனினும் கால்பந்து உலகில் போடப்பட்ட மிக சிறந்த கோல்களில் ரொனால்டோவின் இந்த கோல் இடம்பிடிக்கும் என சிடான் தெரிவித்துள்ளார். 66 ஆவது நிமிடத்தில் யுவன்டஸ் ஆட்டக்காரர் பவ்லோ டியாபாலாவுக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்ட ரியல் மாட்ரிட், மார்சேலோ மூலம் மூன்றாவது கோலைப் போட்டது. ஏப்ரல் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட ஆட்டம் நடைபெறவுள்ள வேளையில் ரியல் மாட்ரிட் கிட்டத் தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதிச் செய்துள்ளது.