கோலாலம்பூர், ஜூலை 31-
தற்போது ஒவ்வொரு வாரமும் அமல்படுத்தப்பட்டுவரும் எண்ணெய் விலை நிர்ணய முறையில் மாற்றத்தை கொண்டுவர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஸைனுடின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் நிதியமைச்சு, எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருவதாக சாரிக்கே ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் வோங் லிங் பியூ வினவிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
இது சம்பந்தமான இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர், பல்வேறு கருத்துகளையும், அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எடுக்கப்படும் முடிவானது இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்துத் தரப்பாருக்கும் நன்மையைக் கொண்டுவர வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
வாராந்திர அடிப்படையில் எண்ணெய் விலை நிர்ணயிப்பதால் எண்ணெய் நிலைய உரிமையாளர்கள் நட்டமடையவதாகக் கூறப்படும் புகார் பற்றிக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நிலையில் அது கட்டுப்பட்டில்தான் இருப்பதாகவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்க நிலையத்தில் பொருள்கள் விற்கும் கடைகளை ஊக்குவித்து அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ள ஊக்குவிப்பு அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


