கோலாலம்பூர், ஆக.1 –
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முஹமட் , இந்திய முஸ்லிம் வம்சாவளியைச் சேர்ந்தவர் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மாட் சாஹிட் தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் ம.இ.கா இளைஞர் பிரிவின் உயர்கல்வி குழு தலைவர் சாடியதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என அந்த பிரிவின் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி குழு தலைவர் கணேசன் ஸ்ரீரங்கம் தமது முகநூலில் சாஹிட் குறித்து
தெரிவித்த கருத்தை பெரித்தா டெய்லி என்ற அகப்பக்கம் செய்தியாக வெளியிட்டுள்ளது. மஹாதீரின் ஓர் இந்திய முஸ்லிம் என சொல்லியதன் வழி நாட்டிலுள்ள இதர இனவாதிகளுடன் தாம் வேறுப்பட்டவரில்லை என்பதை சாஹிட் நிரூபித்துள்ளதாக கணேசன் கடுமையாக சாடியிருந்தார்.
நாட்டின் மூத்த தலைவராகவும் துணைப் பிரதமராகவும் இருக்கும் சாஹிட் தரம் தாழ்ந்த அரசியலை கையில் எடுத்திருக்ககூடாது என கணேசன் தெரிவித்தார். இதனால் இளம் தலைமுறையினர் மத்தியில் தமக்கு இருந்த மதிப்பை அவர் இழந்துள்ளார் என கணேசன் தெரிவித்தார்.
இதனிடையே கணேசனின் கருத்து குறித்து கருத்துரைத்த அது ம.இ.கா இளைஞர் பிரிவின் நிலைப்பாடல்ல என உறுதியாக சொன்னார். இந்த விவகாரம் தொடர்பில் கணேசனை அழைத்து தாம் விளக்கம் கேட்கவுள்ளதாகவும் சிவராஜ் கூறினார்.
அண்மையில் கிளானா ஜெயா அம்னோ பேராளர் கூட்டத்தில் பேசிய ஸாஹிட், டாக்டர் மகாதீரின் பழைய அடையாள அட்டையின் நகலைக் காட்டி, அதில் அவரின் பெயர் மகாதீர் த/பெ இஸ்காண்டார் குட்டி என இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்த விவரங்கள் தேசிய பதிவிலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ யாஸிட் ரம்லி அளித்துள்ளார்.


