கோலாலம்பூர், ஆக. 3-
‘ராஜா டெ ஓன் மேன் ஷோ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் கலந்துக்கொள்வதற்காக உலகின் முன்னணி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா இன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி வியாழக்கிழமை மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.
அவர் மலேசிய நேரப்படி மாலை 3.30 மணி அளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார். அவரை நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுவினரோடு மலேசிய ரசிகர்களும் வரவேற்றனர்.
2013ஆம் ஆண்டு மைஹிவன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிங் ஆஃப் கிங் எனும் மாபெரும் இளையராஜா இசை நிகழ்ச்சி, ஸ்டேடியம் மெர்டேகாவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், உடல்நிலை குறைவு காரணமாக இளையராஜா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
அந்த நிகழ்ச்சியில் மீண்டும் இளையராஜாவை அழைத்து வருவேன் என மைஹிவன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஷாஹூல் அமிட் கூறியிருந்தார். அதேபோல் அக்டோபர் 7ஆம் தேதி இசைஞானி இளையராஜா தலைமையில் ‘ராஜா டெ ஓன் மேன் ஷோ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கின்றது.
இதன் அதிகாரப்பூர்வ அறிமுகவிழா இவ்வாரம் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பிரிக்பில்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் நடக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் மலேசிய ரசிகர்களைச் சந்திக்க இசைஞானி இளையராஜா வருகை புரிகின்றார் என மைஹிவன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஷாஹூல் அமிட் அண்மையில் உறுதி படுத்தினார்.
முன்னதாக மலேசிய உள்ளூர் கலைஞர்கள் இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்விப்பார்கள். பின்னர் 8 மணிக்கு அதிகாரப்பூர்வ தொடக்கவிழாவில் இசைஞானி இளையராஜா பங்கேற்கிறார். அவருடன் பிரபல பின்னணி பாடகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘ராஜா டெ ஓன் மேன் ஷோ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி குறித்த முதல் போஸ்டர் அன்றைய நாள் வெளியிடப்படும். அதோடு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் இதர பாடர்கள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்படும். இதுவரையில் முன்னணி பாடகர்களான ஹரிஹரன், ஹரிசரன், மனோ, சித்ரா, ஸ்ரேயா கோஷேல் ஆகியோரும் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதையும் ஷாஹூல் தெரிவித்துள்ளார்.
‘ராஜா டெ ஓன் மேன் ஷோ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி இளையராஜா ரசிகர்கள் மட்டுமின்றி, இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சனிக்கிழமை பிரிக்பில்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் 3000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


