புதுடெல்லி,
குஜராத் மாநிலத்தில் 3 டெல்லி மேல்-சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 8-ந் தேதி நடக்கிறது. இதில், பா.ஜனதா தனது பலத்தை மீறி, 3-வது இடத்துக்கும் வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இதற்கிடையே, ஓட்டுச்சீட்டில், யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்கும் ‘நோட்டா’ இடம்பெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது, தங்கள் கட்சிக்கு எதிராக அமையும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
எனவே, ‘நோட்டா’ இடம்பெறக்கூடாது என்று தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. ‘நோட்டா’வை நீக்க உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் செய்தது. ஆளும் பா.ஜனதா கட்சியும் ‘நோட்டா’வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்து உள்ளது. காங்கிரஸ் மனு தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, குஜராத் மாநிலங்களவை தேர்தலில் நோட்டா இடம் பெற இடைக்கால தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
மேலும், கடந்த 2015- ஆம் ஆண்டே நோட்டா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
காங்கிரஸ் 3 வருடம் அமைதியாக இருந்தது ஏன்?
இந்நிலையில் மத்திய சட்டமந்திரி ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலங்களவை தேர்தலில் ‘நோட்டா’ காங்கிரஸ் ஆட்சியின் போதே கொண்டுவரப்பட்டது என கூறிஉள்ளார். நோட்டா வாக்களிப்பு முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிகமான காங்கிரஸ் எம்.பி.க்களே அவையில் உள்ளனர், அவர்கள் மூன்று ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டனர், இப்போது கேள்வி எழுப்புகிறார்கள். மாநிலங்களவை தேர்தலில் நோட்டா இடம் பெறுவது தொடர்பான ஜனவரி 2014-ம் ஆண்டைய அறிவிப்பை கூட அவர்கள் பார்க்கவில்லை. மத்தியில் 2014 மே மாதம்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்தது, காங்கிரஸ் தலைமையிலான அரசின் விதிமுறையே செயல்படுத்தப்படுகிறது,” என கூறிஉள்ளார்.


