கோலாலம்பூர், அக். 3-
எல்லா விஷயத்திலும் எது நடந்தாலும் என்னையே குறை கூறுகின்றனர் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். மன்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் மோசமான ஆட்டம் குறித்தும் என்னை குறை கூறுகின்றனர் என்றார் அவர்.
நஜீப் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இதனை கூறியிருக்கின்றார். அண்மைய காலமாக பலவிதமான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். அனைவரும் எளிதாக இவ்வாறு குறை கூறி வருகின்றனர். எல்லா தவறுக்கும் நஜீப்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர் என்றார் அவர்.
பொருட்களின் விலை குறையாவிட்டால் அது நஜீப் தவறு. மன்செஸ்டர் யுனைடெட் தோல்வி கண்டால் அதுவும் நஜீப் செய்த தவறு. ஒரு வேளை நாளை பலத்த மழை பெய்து வேலை செய்யும் இடத்திற்கு தாமதமாகச் சென்றால் அதுவும் நஜீப் தவறுதான் என கூறுவார்கள் போல் உள்ளது என்றார் நஜீப்.
கெவின் மொராய்ஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நபர் குற்றத்தை ஒப்புக் கொள்ள 35 லட்சம் வெள்ளி கொடுக்க நஜீப் முன் வந்தார் எனவும் நீதிமன்றம் கூறியதை தொடர்ந்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டு அபத்தமானது என்றார் நஜீப்.


