Homeசமூகம்சீபில்டு மாரியம்மன் ஆலயம் உடைக்கப்படலாம் ! அனைவரும் ஒன்றிணைவோம் - டி மோகன் அழைப்பு

சீபில்டு மாரியம்மன் ஆலயம் உடைக்கப்படலாம் ! அனைவரும் ஒன்றிணைவோம் – டி மோகன் அழைப்பு

ஷா ஆலாம், அக். 16-

ஷா ஆலாம் பழைய சீபில்டு தோட்ட மகா மாரியம்மன் ஆலயத்தை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த அவ்வாலயத்தை தகர்க்கும் பணி புதன்கிழமை காலை நிச்சயம் நடக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆலயத்தை காக்க பொதுமக்களால் மட்டுமே முடியும் என மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிப் பேதங்கள், கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தை தற்காக்க இந்துக்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒரே அணியில் இணைய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். முன்னதாக புதன்கிழமை காலை ஆலயத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த சிறப்பு பூஜையில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு ஆலயம் உடைக்கப்படாமல் இருப்பதற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பழைய சீபில்டு தோட்ட மாரியம்மன் ஆலயத்தை முற்றாக அழிக்க வேண்டும் என ஷா ஆலாம் உயர்நீதிமன்றம் செப்டம்பர் 28ஆம் தேதி ஆணை பிறப்பித்திருந்தது. ஆலயத்தை அப்பகுதியிலிருந்து அகற்ற குறிப்பாக ஆலயத்தை உடைக்க நகராண்மைக்கழக அதிகாரிகள் அங்கு வருவார்கள் என கூறப்பட்டதால் திங்கட்கிழமை ஆலயத்தில் பொதுமக்கள் குவிந்தனர். மதியம் ஆகியும் எவரும் வராததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே புதன்கிழமை காலை இந்த ஆலயம் நிச்சயம் இடிக்கப்படும் என கூறப்படுகின்றது. மக்கள் ஒன்று கூடினால் மட்டுமே 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தை தற்காக்க முடியும். அதனால் பொது மக்கள் சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் என அனைவரும் ஆலயத்தில் ஒன்றுகூட வேண்டும் என செனட்டர் டத்தோ டி.மோகன் கேட்டுக் கொண்டார். முன்னதால் திங்கட்கிழமை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் சீபில்டு மாரியம்மன் ஆலயம் காப்பாற்றப்பட்டது.

இப்போது ஆலயத்தை தற்காக்க சாகும் வரை உண்ணாவிரதத்தையும் ஆலயத்தைச் சேர்ந்தவர்கள் முன்னெடுக்கின்றார்கள். எது எப்படி இருந்தாலும் பொதுமக்களின் ஆதரவால் மட்டுமே ஆலயம் உடைபடுவதை தடுக்க முடியும். இந்தியர்களின் ஒற்றுமையை புலப்படுத்த ஒரு அருமையான வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கின்றது. சீபில்டு மகா மாரியம்மன் ஆலயத்தைக் காக்க நாம் அனைவரும் ஒரே அணியிலிருந்து செயல்பட வேண்டும் என டி.மோகன் கேட்டுக்கொண்டார்.

spot_img

latest articles

explore more