Homeஅரசியல்உருமாற்றத்தைக் கொண்டு வரவே போட்டியிடுகிறேன் -ராமலிங்கம்

உருமாற்றத்தைக் கொண்டு வரவே போட்டியிடுகிறேன் -ராமலிங்கம்

கோலாலம்பூர், அக். 20
மஇகாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவேண்டும். அந்த உருமாற்றம் கட்சியின் மேம்பாட்டிற்கு வித்திடவேண்டும். அதை மட்டுமே சிந்தனையில் நிலை நிறுத்தி தாம் கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக உமா ராணி குழுமத்தின் உரிமையாளர் ஏ.கே.ராமலிங்கம் தெரிவித்தார்.

1996ஆம் ஆண்டு மஇகாவில் இணைந்த நான் பின்னர் கிளை தொகுதி, மாநிலம், என அனைத்து பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளேன். 2013ஆம் ஆண்டு மஇகாவின் மத்திய செயலவைக்கு போட்டியிட்டேன். மஇகா தேசிய அரசியலில் நான் புதுமுகம் என்றாலும் என் மீது நம்பிக்கை வைத்து மத்திய செயலவை உறுப்பினராக கட்சியின் பேராளர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆனால் ஓராண்டுக்குள் அத்தேர்தல் செல்லாது என கூறப்பட்டது. பின்னர் கட்சியில் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமைக்காக தொடர்ந்து போராடினேன். பின்னர் மஇகாவில் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளேன். இவை அனைத்தும் கட்சியில் இணைந்து பாடுபடவேண்டும் என்பது தான். பின்னர் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர். டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் என்னை கட்சியில் இணை மாறு கேட்டுக்கொண்டதோடு கட்சியிலிருந்து விலகிய அனைவரையும் மீண்டும் அரவணைத்துக் கொண்டார்.

இப்போதும் மக்களுக்கு குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என ராமலிங்கம் குறிப்பிட்டார். 14ஆவது பொது தேர்தலுக்குப் பிறகு மஇகா எதிர்கட்சியாகி விட்டது. இத்தருணத்தில் பலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார்கள். என்னை பொறுத்தவரை மஇகா என்பது மலேசிய இந்தியர்களின் அடையாளம்.

இனி எந்தவொரு கட்சியும் மஇகாவைப்போல் உருவாக முடியாது. இது நமது கட்சி. மக்கள் இப்போது மஇகாவை ஒதுக்கி வைத்திருந்தாலும் இக்கட்சி உருமாற்றம் கண்டு மக்களுக்கான செயல்திட்டங்களை முன்னெடுக்கும் போது அவர்கள் தாமாகவே நம்மை ஆதரிப்பார்கள் என ராமலிங்கம் குறிப்பிட்டார். மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கட்சியின் உருமாற்றத்திற்கு வித்திடும் தலைவராக விளங்குகிறார். அவருடன் இணைந்து கட்சியை வழிநடத்த தாம் என்றும் துணை நிற்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களிலும் 1,500 பேராளர்கள் மட்டுமே கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் யார் என்பதை தேர்வு செய்யக்கூடிய அங்கீகாரத்தை பெறுவார்கள். ஆனால் இன்று 26,000 பேர் உயர்மட்ட தலைவருக்கான தேர்தலில் வாக்களிக்கவிருக்கின்றார்கள். கட்சியில் யாரால் உருமாற்றத்தை கொண்டு வர முடியும்? இந்திய சமுதாயத்தின் தேவைக்காகவும் உரிமைக்காகவும் யார் மத்திய செயலவையில் குரல் எழுப்புவார்? என்ற கேள்விகளை மனதில் நிலை நிறுத்தி யார் தகுதியான வேட்பாளரோ அவரை மஇகா உறுப்பினர்கள் தேர்தேந்தெடுக்க வேண்டும் என ராமலிங்கம் கேட்டுக் கொண்டார்.

இம்முறை கட்சியில் உதவித் தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் துணை அமைச்சர் என முக்கியமானவர்கள் போட்டியிடுகிறார்கள். கட்சியில் பல ஆண்டுகள் அனுபவம் மிக்க தலைவர்களும் களத்தில் குதித்துள்ளார்கள். ஆனால் இத்தேர்தல் மிக ஆரோக்கியமாக நடைபெறும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறினார். கடந்த காலத்தைப் போல தனித் தனியாக சென்று பிரசாரத்தை மேற்கொள்ளலாம் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் 10 பேரும் ஒரே அணியாக சென்று மாநிலங்கள் தோரும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறோம்.

இது ஆரோக்கியமான தேர்தல். பேராளர்கள் யாருக்கு ஆதரவு வழங்கினாலும். அவர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டு கட்சியின் மேம்பாட்டிற்கு அனைவரும் பாடுபடுவோம் என்ற சிந்தனையை எங்களுக்குள் விதைத்துள்ளோம். பெர்லிஸ் தொடங்கி, ஜோகூர் வரையில் பிரசாரத்தை மேற்கொண்டேன். அங்கு கூடிய பேராளர்களின் ஆதரவை வைத்துப் பார்க்கும் போது வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி வெற்றி பெறும் பட்சத்தில் மஇகாவின் உருமாற்றத்திற்கு நிச்சயம் பாடுபடுவேன் என ராமலிங்கம் உறுதியளித்தார்

இதனிடையே, கூட்டரசுப் பிரதேச தொடர்புக் குழு பதவிக்கு எம்.முனியப்பா போட்டியிடுகிறார். சமுதாய சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவர் பலதரப்பட்ட மக்களுக்கு நன்கு பரிட்சயமானவர் என்பது குறிப்பிடப்பட்டது.

spot_img

latest articles

explore more