கோலாலம்பூர், அக்.23-
அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி மீது நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள 45 குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டது அல்ல என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். இத்தகைய குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் தரப்பினர் அதற்கான ஆதாரங்களை முன் வைக்குமாறு டாக்டர் மகாதீர் கேட்டு கொண்டார்.
சாஹிட் மீதான குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தால் ஜோடிக்கப்பட்டவை என ஒரு சில தரப்பினர் கூறி வரும் தகவல்களில் உண்மையில்லை என மகாதீர் மீண்டும் தெரிவித்தார். நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் தரப்பினர் அதற்கான ஆதாரங்களை தெளிவாக சமர்பிக்க வேண்டும்.
சாஹிட் ஹமிடி மீது நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைக்கு, தேசிய சட்டத்துறை தலைவர் , தோமி தோமஸ் தான் பொறுப்பு என டாக்டர் மகாதீர் கூறினார். இதில் அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
தேசிய சட்டத்துறை தலைவர் என்பவர் அரசியல் கட்சியைச் சார்ந்தவர் அல்ல. வலுவான ஆதாரங்கள் அடிப்படையில் அஹ்மாட் சாஹிட் மீது குற்றச்சாட்டுகள் சுமத்த, தேசிய சட்டத்துறை தலைவர் முடிவு செய்திருக்ககூடும் என தாம் நம்புவதாக மகாதீர் மேலும் தெரிவித்தார்.


