கோலாலம்பூர், அக்.23 –
ஈ.சி.ஆர்.எல் எனப்படும் கிழக்குக் கரை ரயில் திட்டத்தை ரத்து செய்வதால், அரசாங்கத்துக்கும் மீண்டும் ஆயிரத்து 2 கோடி ரிங்கிட் கிடைத்து விடும் என்று கூற முடியாது என முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். மாறாக இந்த திட்டத்துக்காக சீனாவின் குத்தகை நிறுவனத்துக்கு எக்சிம் வங்கி வழங்கிய ஆயிரத்து 968 கோடி ரிங்கிட் கடன் அரசாங்கத்திடம் கோரப்படும் என அவர் சொன்னார்.
20 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தி விடும் வகையில் அரசாங்கம் இந்த கடனைப் பெற்றுள்ளது. அனைத்து தொகையும் நேரடியாக சீனாவின் குத்தகை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டால், அந்த கடனை எக்சிம் வங்கி ரத்து செய்யும். அதேவேளையில் சீனாவின் குத்தகை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடனை அரசாங்கத்திடம் கோரும் என நஜிப் தெரிவித்தார்.
எனவே இத்திட்டத்தை ரத்து செய்வதால், அரசாங்கத்துக்கு ஆயிரம் கோடி ரிங்கிட் மீண்டும் கிடைக்கும் என கூற முடியாது. இதனை நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கருத்தில் கொண்டுள்ளதா என்றும் நஜிப் தமது முகநூல் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈ.சி.ஆர்.எல் திட்டம் ரத்து செய்யப்படுவதன் மூலம் மலேசிய ரயில் லிங்க் நிறுவனம் மீண்டும் ஆயிரம் கோடி ரிங்கிட்டைப் பெற முடியும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். அந்த தொகையானது , சீன குத்தகை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட தொடக்கப்பட்ட தொகை என்றும் அவர் தெரிவித்தார்.


