கோலாலம்பூர், அக். 26
இந்திய சமுதாயத்தை வெற்றிபெற்ற ஒரு வர்த்தகச் சமுதாயமாக உருமாற்ற வேண்டும் என்ற நோக்கில் முன்னாள் அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தில் ஒரு சிறப்பு நிதியினை ஒதுக்கி, ‘தெக்குன், ‘அமானா இக்தியார்,‘எஸ்.எம்.இ போன்ற அமைப்புகளின் வாயிலாகத் தொழில் செய்ய விரும்பும் அல்லது தங்களது தொழிலை நகர்த்த விரும்பும் சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு கடனுதவி கிடைக்க வழிசெய்து வந்தது.
கடந்த காலத்தில் இந்தக் கடனுதவி நடவடிக்கையில் சில பலவீனங்கள் இருந்ததாகக் கூறப்பட்டாலும், இது ஒரு நல்ல திட்டம். ஆகையால் மலேசியாவில் உள்ள இந்திய வர்த்தகர்களுக்குப் பயனளிக்கும் இத்திட்டத்தைத் தொடர்ந்து வழிநடத்தி, இதற்கான நிதியை ஒதுக்கி, அது திறன்பட செயல்பட பிரதமர்துறை அமைச்சர் வேதமூர்த்தி மேற்பார்வையில் வழிநடத்தப்பட வேண்டும் என, மைக்கியின் முன்னாள் தலைவரும், ஜொகூர் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத் தலைவருமான டான்ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரன் அரசாங்கத்திடமும், மாண்புமிகு பிரதமர் துன் டாக்டர் மகாதீரிடமும் பரிந்துரைப்பதாகத் தெரிவித்தார்.
மிக விரைவில் நாட்டின் 2019-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவிருப்பதால், அதில் இந்திய வர்த்தகர்களுக்குப் பயனுள்ள இத்திட்டங்களும் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்பதே ‘ஜிக்கியின் எதிர்பார்ப்பு என்று மேலும் அவர் தெரிவித்தார்.
அதோடு இளம் தொழில்முனைவர்களை உருவாக்க அது தொடர்புடைய பயிற்சிகளும், மனிதவள அமைச்சின் கீழ் தொழிலாளர்களுக்கான திறன் பயிற்சிகளும் அதிகப்படுத்தப்பட்டு, உள்நாட்டு இளைஞர்கள் சில துறைகளில் ஈடுபட வழிசெய்ய வேண்டும். காரணம் இன்னமும் இந்திய வர்த்தகர்கள் பாரம்பரியமாக வழிநடத்தி வரும் சில வர்த்தகத் துறைகளில் வேலைக்கு அந்நியத் தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட துறை சார்ந்த திறன்பயிற்சிகளை உள்நாட்டவர்களுக்கு வழங்கும்பட்சத்தில், இங்கு உள்நாட்டினருக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு,அந்நியத் தொழிலாளர்களைச் சார்ந்திருக்கும் வழக்கம் குறைந்து அவர்களின் தேவைக்கான எதிர்பார்ப்பும் குறையும்.
அதுமட்டுமின்றி பொருளாதார ரீதியில் மற்ற சமூகத்தைவிட, இந்திய சமுதாயம் பின் தங்கிய நிலையில் இருப்பதே நிதர்சன உண்மை. ஆகையால் ‘பி.என்.பி சிறப்பு முதலீட்டுத் திட்டத்தில் இந்தியர்களுக்கு முதலீடு செய்ய வாய்ப்புகள் வழங்கப்படுவதன் வாயிலாக அவர்களின் பொருளாதார நிலை சற்று வலுப்பெறும்.
அரசாங்கம் (‘பி 40 பிரிவு) குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உதவும் வகையில் பல முயற்சிகளை எடுத்து வருவது, பாராட்டுக்குரிய ஒன்று. அதே நேரத்தில் (‘எம் 40பிரிவு) நடுத்தர வருமானம் பெறும் மக்கள்மீது சற்றுக் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மற்றும் விலைவாசி பாதிப்பில் ‘எம் 40 பிரிவு மக்களும் சிக்கித் தவிக்கின்றனர். ஆகையால் அவர்களின் தனிநபர் வருமான வரி மற்றும் நிறுவன வருமான வரியைச் சற்றுக் குறைத்தால்,அவர்களின் பொருளாதாரச் சுமையும் குறையும்.
இந்தச் சந்தர்ப்பத்தில், நீண்டகாலமாக இந்திய வர்த்தகர்கள், குறிப்பாக இந்திய உணவகம், இந்திய முஸ்லிம் உணவகம், நகைக்கடை, ஜவுளிக்கடை, உலோகத்துறை,சிகையலங்காரம் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கி வரும் அந்நியத்தொழிலாளர் பிரச்னையைக் களைய ஒரு நல்ல தீர்வினை விரைந்து எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். காரணம் நாளுக்கு நாள் இத்துறைகளைச் சார்ந்த வர்த்தகர்கள் தங்களது வியாபாரத்தைக் கைவிடும் அவல நிலை ஏற்படுகிறது.
நாட்டின் முன்னேற்றத்திற்கு புதிய மலேசியாவின் பயணத்தில் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ‘ஜிக்கிஎன்றும் ஆதரவு வழங்கி, அரசுடன் கைகோர்த்துப் பயணிக்கும் என்று ‘ஜிக்கி தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கென்னத்ஈஸ்வரன் தமது அறிக்கையின் வாயிலாகக் குறிப்பிட்டுள்ளார்!


