கோலாலம்பூர், டிச.15-
அம்னோவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வுக் காண சிறந்த வழிமுறையை அக்கட்சி அடையாளம் காண வேண்டும் முன்னாள் தலைவரும் , பிரதமருமாகிய டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட, கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறும் நெருக்கடிகளையும் கையாள சிறந்த வழிமுறைத் தேவைப்படுகிறது.
இதைதான் அஹ்மாட் சாஹிட் ஹமிடியும் ஆலோசித்துக் கொண்டிருக்கக்கூடும் என நஜிப் கூறினார். எனவே சிறந்த வழிமுறையை அடையாளம் காண அனைத்து தரப்பினரும் பொறுமைக் காக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அம்னோவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி மிக தீவிரம் அடைந்து வருவதை தாம் உணர்ந்திருப்பதாக நஜிப் மேலும் தெரிவித்தார்.
எனினும் அம்னோவின் அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வழிமுறைத் தேவைப்படுகிறது. இவ்வேளையில் நாட்டின் மிகப் பெரிய அரசியல் கட்சியான அம்னோ, மண்ணுக்குள் புதைந்து விடாமல், ஓர் அரசியல் கட்சியாக தொடர்ந்து வலுப்பெறுவதற்கான இலக்குடன் கட்சி உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
அம்னோவில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்கள் இருக்கின்றன. நாடு முழுவதும் 22 ஆயிரம் கிளைகள் இருக்கின்றன. அம்னோவைப் போல், மலேசியாவில் வேறு எந்த ஒரு கட்சியும் இத்தகைய கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதை நஜிப் நினைவுறுத்தினார்.


