லண்டன், டிச. 18-
இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணியான மன்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகி பொறுப்பில் இருந்து ஜோஷே மரின்யோ விலகியுள்ளார். இந்த தகவலை அந்த கால்பந்து கிளப்பின் அதிகாரத்துவ இணையதளம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜோஷே மரின்யோ நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகி உள்ளதாகவும் இதுவரையில் மன்செஸ்டர் யுனைடெட் உடன் இணைந்து பணியாற்றிய அவருடைய சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு அவரின் எதிர்காலத்திற்கு அச்சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஜோஷே மரின்யோ வெளியேறி இருப்பதை அடுத்து யுனைடெட் அணியை வழி நடத்த இடைக்கால நிர்வாகி நியமிக்கப்படுவார். அவர் இந்த ஆண்டு இறுதிவரை மன்செஸ்டர் யுனைடெட் அணியை வழிநடத்துவார். இந்த இடைப்பட்ட காலத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கு நிரந்தர நிர்வாகி அடையாளம் காணப்படுவார் என்றும் அந்த கால்பந்து சங்கம் கூறியுள்ளது.
உலகின் தலைசிறந்த நிர்வாகியாக இருக்கும் ஜோஷே மரின்யோ 2 முறை ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை வென்று அதிரடி படைத்துள்ளார். அதோடு செல்சீ அணியின் நிர்வாகியாக இருந்து 3 முறை பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சாதனைகளை படைத்துள்ள ஜோஷே மரின்யோ முன்னணி கால்பந்து அணிகளின் நிர்வாகியாக பொறுப்பேற்ற பிறகு 3 முறை நீக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2002ஆம் ஆண்டு தொடங்கி 2004ஆம் ஆண்டுவரை போர்த்துகலின் போர்த்தோ அணியின் நிர்வாகியாக இருந்த மரின்யோ, ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தை வென்று முன்னணி கால்பந்து அணிகளின் கவனத்தை ஈர்த்தார். 2004ஆம் ஆண்டு மத்தியில் இங்கிலாந்தின் செல்சீ அணியின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். 2004/2005, 2005/2006, ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்று அதிரடி படைத்தார்.
இருப்பினும் 2007ஆம் ஆண்டு செல்சீ அணியின் நிர்வாகி பொறுப்பிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். பின்னர் ஓய்விற்கு பிறகு 2008ஆம் ஆண்டு இத்தாலியின் இண்டர் மிலான் அணியின் இணைந்த மரின்யோ, மீண்டும் தமது அதிரடியை தொடங்கினார். 2010ஆம் ஆண்டு அவ்வணி இத்தாலியின் அனைத்து கிண்ணங்களையும் வென்ற வேளையில் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தையும் வென்று வரலாறு படைத்தது. அந்த மகத்தான வெற்றியுடன் அந்த அணியிலிருந்து விடைபெற்ற மரின்யோ, ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார்.
அவ்வணி 2011ஆம் ஆண்டு லா லீகா கிண்ணத்தை வென்றது. இரண்டு முறை ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ண லீக் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் தோல்வி கண்டது. இதனால் மரின்யோ அவ்வணியின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மீண்டும் 2013ஆம் ஆண்டு செல்சீ அணியின் இணைந்த மரின்யோ 2015ஆம் ஆண்டு பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றார். பின்னர் அவ்வாண்டு மத்தியில் ஆட்டக்காரர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் அவர் அணியின் நிர்வாகி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
2016ஆம் ஆண்டு மன்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகி பொறுப்பில் அமர்ந்த மரின்யோ அவ்வணி ஐரோப்பா லீக் கிண்ணத்தை வென்றார். ஆனால் அதன் பிறகு மன்செஸ்டர் யுனைடெட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மரின்யோ மன்செஸ்டர் யுனைடெட் அணி ஆட்டக்காரர்களுடன் சுமூகமான உறவை கொண்டிருக்கவில்லை என இங்கிலாந்து நாளேடுகள் தொடர்ந்து கூறி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை லிவர்பூல் அணியிடம் மன்செஸ்டர் யுனைடெட் 3 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வி கண்டது. இந்நிலையில் மரின்யோ அணியை விட்டு விலகியுள்ளதை மன்செஸ்டர் யுனைடெட் உறுதிப்படுத்தியுள்ளது.
இப்போது யார் மன்செஸ்டர் யுனைடெட் அணியின் அடுத்த நிர்வாகியாக நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மன்செஸ்டர் யுனைடெட் அணியின் துணை நிர்வாகியான அவ்வணியின் முன்னாள் ஆட்டக்காரர் மைக்கெல் கேரிக், உலகின் தலைசிறந்த கால்பந்து விளையாட்டாளராக விளங்கி பின்னர் ரியல் மாட்ரிட் அணியின் நிர்வாகியாக பொறுப்பேற்று 3 முறை தொடர்ச்சியாக ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தை வென்ற ஜீடான், அல்லது டோட்டன்ஹம் அணியின் நிர்வாகி பொத்திச்சினோ ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் உள்ளன.


