கோலாலம்பூர், பிப் 18-
ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களிலும் வழிப்பறி போன்ற கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக நடக்கும் இடங்களிலும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அசிஸா வான் இஸ்மையில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பு அம்சங்களை உடனடியாக வலுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பாக சம்பந்தப்பட்ட பகுதியின் நடத்துனர்களும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
பாதுகாப்புகள் இருக்கும் இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலும் அங்கு பாதுக்காப்பு அறை இருக்க வேண்டும் என்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 9ஆவது உலக நகரப்புற கருத்துகளத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை செராஸ், தாமான் முத்தியாரா எம்ஆர்டி ரயில் நிலையத்தின் மின்தூக்கிக்குள் 48 வயதுடைய பெண் ஆடவரால் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மகளிர், குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சருமான வான் அஸிஸா வலியுறுத்தினார்.
ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் பெண்கள் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


