செமினி, பிப் 20-
செமினிக்கு மீண்டும் வருகை மேற்கொண்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இங்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கும் தமக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று இங்குள்ள மக்களிடத்தில் தெளிவுப்படுத்தினார்.
தேசிய முன்னணி வேட்பாளர் சகாரியா ஹனாபிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதற்காக இங்கு வருகை புரிந்த நஜிப் இத்தொகுதியில் ஏழ்மை நிலையில் வாழும் குடும்பங்களையும் சென்று கண்டார்.
தாம் வேட்பாளரோ அல்லது கட்சி தலைவரோ கிடையாது. தேசிய முன்னணியின் தலைவர் என்ற முறையில் இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணியை வெற்றிப் பெற செய்ய உதவ வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த வருகையை மேற்கொண்டுள்ளேன் என்றார் அவர்.
இந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் தமது மனைவியையும் தம்முடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று பிகேஎஸ் துணைத் தலைவர் டததோஸ்ரீ அஸ்மின் அலி கூறியிருப்பது குறித்து கருத்துரைத்த நஜீப் இது சற்றும் பொருத்தமற்றது என்றார்.
அஸ்மின் அலியின் மனைவி பற்றி சொல்வதானாலும் கூட நிறைய கதைகள் உள்ளன என்று அவர் பதிலளித்தார்.
செமினிக்கான தமது வருகை மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே என்று கூறப்படுவது குறித்து கருத்துரைத்த நஜீப் அனைவரின் கவனமும் இடைத்தேர்தல் மீது இருக்குமே தவிர தம் மீது அல்ல. இவை யாவும் முக்கியமற்ற விவகாரங்களாகும்.
இது என்னை பற்றிய தேர்தல் கிடையாது. மக்களின் நலன் குறித்த தேர்தல் என்று நஜீப் தெரிவித்தார்.
மக்களின் உரிமைகளுக்காகவும் மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை தீர்ப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நஜீப் கூறினார்.


