கோலசிலாங்கூர், ஆக. 25-
இங்குள்ள ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளியிலுள்ள பாலர் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முழுசெலவில் குளிரூட்டி (Air Cond) பொருத்தப்படவிருந்ததை பள்ளியின் தலைமையாசிரியர் தடுப்பது எங்களுக்கு கடுமையான அதிருப்தியை அளிப்பதாக அதன் தலைவர் பத்மநாதன் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் இப்பள்ளிக்கு இடமாற்றலாகி வந்ததிலிருந்து பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து செயல்பட மறுப்பதோடு தனிச்சையாக செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தை பல மாதங்களாக நடத்தாமல் தலைமையாசிரியர் இழுத்தடித்து வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் இது குறித்து வினவும் போது அப்பள்ளியிலுள்ள ஆசிரியர்கள் தலைமையாசிரியர் மாவட்ட கல்வி இலாகாவுடனான சந்திப்பிற்கு சென்றிருப்பதாக மட்டுமே பதில் அளிக்கின்றனர். பார்க்கப்போனால் பள்ளி மற்றும் மாணவர்களின் மேம்பாட்டில் தலைமையாசிரியருக்குத்தான் அதிக பொறுப்பு இருக்க வேண்டும். ஆனால், அவர் இதற்கு நேர்மாறாக நடந்து கொள்கிறார்.

கடந்த வாரம் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் பள்ளி மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்காக பல பரிந்துரைகளை முன்வைத்தோம். அதில் ஒன்று பாலர்பள்ளிக்கு குளிரூட்டியை பொருத்துவது. எங்களின் இந்த பரிந்துரையை தலைமையாசிரியர் ஏற்றுக்கொண்டதோடு அது அக்கூட்டத்தின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாரம் தொடக்கத்தில் பாலர்பள்ளியில் குளிரூட்டி பொருத்தப்படவிருப்பதை தலைமையாசிரியரிடம் தெரிவித்து விட்டோம். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு குளிரூட்டியை பொருத்துவதற்காக பணியாளர்கள் வந்த போது தலைமையாசிரியர் பள்ளிக்குள் வெளியாட்கள் நுழைந்ததாக போலிசில் புகார் அளித்தார். இதனால், பள்ளிக்கு வந்த போலீசார் விசாரித்ததோடு பாலர் பள்ளியில் குளிரூட்டியை பொருத்துவதற்கு கோலசிலாங்கூர் மாவட்ட கல்வி இலாகாவில் அனுமதி பெறும்படி வலியுறுத்தி சென்றனர்.
ஆரம்பத்தில் இந்த பரிந்துரைக்கு ஒப்புக்கொண்ட தலைமையாசிரியர் இறுதி நேரத்தில் இதற்கு தடை போட்டது ஏன்? அதோடு பள்ளியில் குளிரூட்டியை பொருத்த வேண்டுமென்றால் கல்வி இலாகாவில் அனுமதி பெற வேண்டும் என இப்போது கூறுகிறார். இந்த வழிமுறையை கடந்த வாரம் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் அவர் பேசாதது ஏன்? இந்த வழிமுறைக்கான கல்வி இலாகாவின் ஆதாரத்தை காட்டும்படி நாங்கள் வலியுறுத்தியும் அவர் எங்களுக்கு காட்டவில்லை. இது அவர் வேண்டுமென்றே செய்வதாக தெரிகின்றது. அவர் முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நாங்கள் முறைப்படி கல்வி இலாகாவில் அனுமதி பெற்றிருப்போம்.
இப்பள்ளி மேம்பாட்டிற்கும் மாணவர்களின் வளர்ச்சிக்கும் நாங்கள் அவருடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம். ஆனால், அவரோ தனிச்சையாக செயல்படுவதோடு பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை மதித்து அழைப்புகள் விடுப்பதில்லை. நாட்டிலுள்ள இதர தமிழ்ப்பள்ளிகளில் இப்படியா நடந்து கொள்கிறார்கள்?
இதுமட்டுமின்றி, அந்த தலைமையாசிரியர் எங்களின் பிள்ளைகளை எஸ்டேட் பிள்ளைகள் என இழிவுபடுத்தி பேசுவதும் வேதனையாக உள்ளது. தோட்டப்புற பள்ளி மாணவர்கள் என்றால் அவருக்கு அவ்வளவு இலக்காரமா? பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வங்கி கணக்கிலுள்ள பணத்தை எவ்வித காரணமுமின்றி அவர் எங்களிடம் கேட்கிறார். மாணவர்களின் மேம்பாட்டிற்காக எவ்வளவு பணத்தையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எவ்வித ஆவணங்களும் இன்றி தொகையை மட்டும் தலைமையாசிரியர் கேட்பது நியாயமா? இன்னும் பள்ளியில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்கின்றன. மாணவர்களின் முன்னிலையில் ஆசிரியர்கள் வாய் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எங்களை பொருத்தவரையில் இனி அப்படிப்பட்ட தலைமையாசிரியர் இப்பள்ளிக்கு தேவையில்லை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பலமுறை மாவட்ட கல்வி இலாகா, மாநில கல்வி இலாகா, மாவட்ட போலீஸ் நிலையம் ஆகியவற்றில் புகார்கள் அளித்தும் இதுவரையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வேறு வழிகளின்றி தற்போது ஊடகங்களின் உதவியை நாடியிருக்கிறோம். இவ்விவகாரத்தில் கல்வி அமைச்சு, மாவட்ட கல்வி இலாகா இன்னமும் அமைதி காத்து வந்தால் கூடிய விரைவில் மாபெரும் போராட்டத்தை மேற்கொள்வோம் என பத்மநாதன் எச்சரிக்கை விடுத்தார்.
(குறிப்பு: இந்த செய்தி அனேகன்.கோம் இணையத்தள பதிவேட்டிற்கு ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பத்மநாதன் வழங்கியதாகும். அவரது கருத்துகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்)


